பக்கம்:அதிகமான் நெடுமான் அஞ்சி.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

66

அதிகமான் நெடுமான் அஞ்சி

மார்பில் புரள்வதும் சேர மன்னர்களுக்குரிய பனை மாலையே. அவனை இணக்கமாக வைத்து நட்பாடினால் சேர நாட்டுக்கும் நன்மை; தமிழ் நாட்டுக்கும் நன்மை.”-இப்படி வேறு ஒரு சான்றோர் சொன்னார்.

“அவன் சேர குலத்தைக் கண்டால் கனலுகிறான்; அவனைத் தம்பியென்று சொல்வதாவது!” என்றான் சேரன்.

“தம்பியாகவே இருந்தால் என்ன? தம்பி நல்லவனாக இருந்தால் ஒத்துப் போகலாம். தீயவனாக இருந்தால் அடக்கவேண்டிய முறைப்படி அடக்க வேண்டியதுதான். அண்ணன் தம்பிகள் ஒழுங்காக இருந்தால் பாரதப் போரே வந்திராதே! தம் தம்பிமார் என்று தருமபுத்திரர் பாரதப் போரிலிருந்து விலகிக் கொண்டாரா?” என்று மிடுக்காகப் பேசினான் பிட்டங்கொற்றன்.

“நன்றாகச் சொன்னாய் !” என்று அவனைப் பார்த்துப் புன்முறுவல் பூத்தான் சேரமான்.

சான்றோர்களும் அரிசில்கிழாரும் போர் எழாமல் இருந்தால் நலமென்று எண்ணியவர்கள். ஆதலின் தங்களால் இயன்ற நியாயங்களை எடுத்துச் சொன்னார்கள். அவர்கள் கூற்று அரசன் காதில் ஏறவில்லை. போருக்குரிய ஆயத்தங்கள் யாவும் ஆகிவிட்டன என்று அவர்கள் உணர்ந்தார்கள், வெள்ளம் வந்தபின் அணைபோட்டுத் தடுக்கமுடியுமா? அரசர்கள் ஒரு செயலில் முனைந்துவிட்டால் அதை மாற்றுவது மிக அரிது.

அந்த அந்தரங்கக் கூட்டத்தில், அதிகமானோடு போர் செய்ய வேண்டியது இன்றியமையாததே என்ற முடிவை அரசன் வற்புறுத்தினான். படைத்தலைவர்கள் தோளைக் குலுக்கி ஆரவாரித்தார்கள். அமைச்சர்கள் தலையை அசைத்தார்கள். படையெடுத்து வரப்போகிறோம் என்று ஓலை அனுப்ப ஆளும் நாளும் தேர்ந்தெடுத்துவிட்டான் சேரன்.