பக்கம்:அதிகமான் நெடுமான் அஞ்சி.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

போரின் தொடக்கம்

69

கதவுகளோ வைரம்பாய்ந்த மரத்தால் ஆனவை. இரும்புத் தகடுகளாகிய போர்வையை உடையவை. மதிற் கதவுகளை யானைகளைக் கொண்டு முட்டி மோதித் திறப்பது பழங்காலப் போர் முறை. தம்கொம்புகளால் குத்தியும் மத்தகத்தால் மோதியும் யானைகள் கதவுகளை உடைக்கப் பார்க்கும். இந்த முறையில் தகடூரில் உள்ள கோட்டைக் கதவுகளைச் சிதைப்பது இயலாத செயல்.

அன்றியும் கோட்டையில் மற்றொரு வசதி இருந்தது. கோட்டையிலிருந்து வெளியே யாரும் அறியாமல் வரும்படியாக நிலத்துக்கு அடியில் ஒரு சுருங்கை வழி இருந்தது. அப்படி ஒன்று உண்டு என்பதை அதிகமானும் அவனுக்கு மிகவும் வேண்டிய சிலருமே அறிவார்கள். அவனுடைய மனைவிக்கும் தெரியும். ஏதேனும் தீங்கு கோட்டைக்குள் நேர்ந்து, வாயிலும் அடைபட்டிருந்தால் அந்தச் சுருங்கையின் வழியாக வெளியேறி விடலாம். எதிர்பாராதபடி கோட்டைக்குள் தீப் பற்றிக் கொண்டால் அது பயன்படும்.

அதில் எப்போதும் போக்குவரத்து இருந்து கொண்டிருந்தால்தான் சமயத்துக்கு உதவுமென்று அதிகமான் அறிவான். ஆதலின், அவன் ஒன்று செய்தான் அடிக்கடி கோட்டை வாயில் சாத்திப் பூட்டப் பெற்ற நள்ளிரவில் அச்சுருங்கை வழியே புறப்பட்டுச் சென்று புறத்தே இருந்த நகரில் மாறுவேடத்தில் உலாவிவிட்டு வருவான். இதனால் நகர் சோதனையும் சுருங்கைச் சோதனையும் ஒருங்கே நிகழ்ந்தன.

போர் வரப் போகிறது என்பதை முன் கூட்டியே தெரிந்துகொண்ட அதிகமான் தன் கோட்டையின் ஒவ்வோர் அங்குலத்தையும் கவனித்துச் செப்பஞ் செய்யலானான். அகழியின் கரைகளைச் சரிப்படுத்தினான். மதிலில் சிதைந்த பகுதிகளைக் கட்டுவித்தான். மற்றப் பகுதிகளைப் பின்னும் உறுதியாக்கினான். மதிலின் மேல்