பக்கம்:அதிகமான் நெடுமான் அஞ்சி.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

போரின் தொடக்கம்

71

உயிர்ச் சேதம் கூடியவரையில் குறையவேண்டும் என்பதுதானே அவர்களுடைய கொள்கை?

கோட்டைக்கு வெளியே ஊர் விரிந்திருந்தது. பல வீதிகள் இருந்தன. நகர மக்களையெல்லாம் அழைத்து, போர் அணிமையில் வர இருப்பதைக் கூறினான் அதிகமான். முக்கியமான தலைவர்களை அழைத்து இன்ன இன்னபடி நடந்துகொள்ள வேண்டும் என்றான்.

அதிகமான் தனக்கு அவசியமாக இருந்தால் வேண்டிய மன்னர்களைத் துணையாகக் கூட்டிக்கொள்ளலாம் என்று கருதினான். சோழ மன்னனுக்கும் பாண்டியனுக்கும் ஆள் அனுப்பினான். பெருஞ்சேரல் இரும்பொறை போருக்கு வரபோகிறானென்றும், தான் கோட்டையிலிருந்தபடியே போர் செய்யப் போவதாகவும் தெரிவித்தான். ‘கோட்டைக்குள் இருக்கும் வரைக்கும் எங்களுக்கு ஊறுபாடு யாதும் நேராது. ஒருகால் கோட்டைக்கு வெளியே வந்து போரிட வேண்டிய நிலை வந்தால் அப்போது உங்கள் உதவியை எதிர்பார்ப்பேன்’ என்றும் எழுதியனுப்பினான். ஔவையார் தூது சென்று நட்பு உண்டாக்கிய தொண்டைமானுக்கும் இப்படி ஓர் ஓலை போக்கினான். அவர்களிடமிருந்து இசைவான விடையே வந்தது. பாண்டிய சோழ மன்னர்களுக்குச் சேரனிடம் நட்பு இல்லை. ஆதலின் இந்தப் போர் பெரிதானால் தாமும் சேர்ந்து இரும்பொறையை வீழ்த்த வேண்டுமென்று அவர்கள் விரும்பினார்கள்.

அதிகமான் கோவலூரை விட முடியாது என்று சொல்லி அனுப்பியதைப் பொறையன் அறிந்தான். “போருக்கு வா!” என்று அழைத்த அழைப்பாகவே அவன் அதை ஏற்றுக்கொண்டான். படை, வஞ்சியை விட்டுப் புறப்பட்டது.

அதிகமான் படையை எப்படி எப்படி வகுக்க வேண்டுமென்பதைத் தன் படைத் தலைவர்களுக்குச்