பக்கம்:அதிகமான் நெடுமான் அஞ்சி.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
11. முற்றுகை


கோட்டையைச் சுற்றி இப்போது கூட்டமான படைகள் நிற்கவில்லை. யாவரும் பாசறையிலே இருந்தார்கள். சில வீரர்களே வில்லும் அம்புமாகக் கவசத்தை அணிந்துகொண்டு கோட்டையைச் சூழ நின்றார்கள். காரியோ, பிட்டங் கொற்றனோ குதிரையின் மேல் ஏறிக்கொண்டு கோட்டையைச் சுற்றிவந்து அங்கங்கே நின்ற வீரருக்கு ஊக்கம் அளித்துவந்தனர். அங்கே நின்ற வீரர்களேயன்றி மற்றவர்கள் பாசறையில் விருந்துண்டு களித்தார்கள்; கதை பேசி இன்புற்றார்கள். யானைகளுக்கும் குதிரைகளுக்கும் ஒரு வேலையும் இல்லை. காவல் வீரர்கள் மாத்திரம் மாறி மாறி நின்றார்கள்.

ஐந்து நாட்கள் இப்படியே கழிந்தன. எந்த விதமான மாற்றமும் உண்டாகவில்லை. அதிகமான் உள்ளே இருந்தான். சேரன் வெளியிலே இருந்தான். போர் நடப்பதாகவே தோன்றவில்லை.

மறுபடியும் சேரமான் படைத்தலைவர்களோடு ஆராய்ந்தான். “இப்படியே ஒவ்வொரு நாளும் போய்க் கொண்டிருந்தால் என்ன செய்வது? நாம் அயல் நாட்டில் அதிகமான் வெளியே வருவானென்று காத்துக்கிடக்கிறோம். நம்முடைய அரண்மனை வாயிலில் தம் குறைகளைக் கூறக் காத்துக்கிடக்கும் குடிமக்களைப் போலவே இருக்கிறோம். அதிகமானே உள்ளே இனிமையாக உறங்குகிறான். இப்படியே இருந்தால் நம் எண்ணம் என்னாவது ?” - சேரமான்தான் பேச்சைத் தொடங்கினான்.

“அதிகமான் வெளியிலே வந்தால் இரண்டுநாள் நம்மோடு எதிர் நிற்க முடியாது” என்றான் நெடுங்கேரளன்.

அதிக-6