பக்கம்:அதிகமான் நெடுமான் அஞ்சி.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80

அதிகமான் நெடுமான் அஞ்சி

காத்தோம்; இன்னும் சில காலம் பார்க்கலாம். முன் வைத்த காலைப் பின் வைப்பது வீரம் அன்று.” இவ்வாறு அவன் சொன்னதை மறுத்துப் பேசச் சேரனால் இயலவில்லை.

உள்ளே அதிகமான் நிலை என்ன என்பதைப் பார்க்கலாம். வெளியிலே படைகள் தொகுதியாக நிற்கவில்லையென்பதை அவன் கண்டான். சேரனுடைய கருத்து அவனுக்குத் தெளிவாயிற்று. சேரன் எத்தனை காலம் வெளியிலே நின்றிருந்தாலும் அதுபற்றி அவனுக்குக் கவலை இல்லை. தன் அரண்மனையில் தானே அவன் இருந்தான்? ஒரு மாத காலத்துக்கு வேண்டிய உணவு அவனுக்கு இருந்தது. அதற்கு மேலும் உணவுப் பொருளை வெளியிலிருந்து வருவிக்கும் வழி அவனுக்குத் தெரியும்; யாரும் அறியாத சுருங்கை வழி இருக்கவே இருக்கிறது.

உள்ளே அதிகமான் வீரர்களுக்கு ஊக்கம் ஊட்டிக் கொண்டிருந்தான். அவனுடைய படையின் பெரிய தலைவனுக்குப் பெரும்பாக்கன் என்று பெயர். அவனுக்குப் படைக்கலங்களை உதவிப் போர்க்குரிய பொற்பூவை அணிந்து சிறப்புச் செய்தான்.[1] தன்னுடைய வீரர்களையெல்லாம் வயிறாரச் சாப்பிடச் சொன்னான். அவர்களுடன் தானும் அமர்ந்து உண்டான்.[2] இத்தகைய செயல்கள் வீரர்களுக்கு அதிகமான்பால் இருந்த அன்பைப் பன்மடங்கு மிகுதியாக்கின.

தோள் தினவெடுத்த வீரர்களுக்குப் பகைப் படைகளுடன் எதிர்நின்று தம்முடைய வீர்த்தைக் காட்டும் வாய்ப்பு வரவில்லையே என்ற ஏக்கம் உண்டாயிற்று. திருமணத்தில் ஒன்றுகூடி விருந்துண்பது போல அல்லவா அவர்கள் உண்டு களிக்கிறார்கள்?


  1. தகடுர் யாத்திரை (தொல். புறத். 63, உரை)
  2. தகடூர் யாத்திரை (புறத்திரட்டு, 1258.)