பக்கம்:அதிகமான் நெடுமான் அஞ்சி.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முற்றுகை

81


ஔவையாரும் கோட்டைக்குள் இருந்தார். அதிகமானுடைய பொழுது இனிமையாகக் கழிவதற்குக் கேட்க வேண்டுமா? கதவைத் திறந்துகொண்டு வெளியிலே சென்று போர் செய்வதாக இருந்தால் தான் அவனுக்கு வேலை இருக்கும். இப்போது ஒரு வேலையும் இல்லை. புறத்திலே இருப்பவர்கள் மதிலைக் குலைத்துக்கொண்டு உள்ளே வந்தால் அப்போது கடும் போர் மூளும்; அவனுக்கு வேலை இருக்கும். அது நடக்கக்கூடியதா ?

சில சிறிய படைத் தலைவர்கள், “எத்தனை காலம் இப்படியே வெட்டிச்சோறு தின்றுகொண்டு கிடப்பது?” என்று பேசிக் கொண்டார்கள்.

“கதவைத் திறந்துவிட்டுப் போர்க்களத்திலே குதித்துச் சேரன் படைகளை உழக்கிக் குலைத்து ஓட்டி விடலாம். நம் அரசர்பெருமான் எதற்காக அடைத்துக் கிடக்கிறாரோ, தெரியவில்லை” என்றனர் சிலர்.

“வெற்றியோ தோல்வியோ, விரைவில் முடிவு காணுவதுதான் நல்லது. இப்படியே நாம் இருந்தால் நம் படைக்கலங்கள் துருப்பிடித்துப் போய்விடும் ; நம் வலிமையும் துருவேறிவிடும்” என்றனர் சிலர்.

அவர்கள் பேசிக்கொள்வதை ஒருவாறு அதிகமான் உணர்ந்தான். ஔவையாரோடு உரையாடிக் கொண்டிருந்தபோது, “இப்போதே கதவைத் திறந்து கொண்டு, ஆட்டுமந்தையில் புலி பாய்வதுபோல நாம் சேரன் படைமேல் பாயவேண்டுமென்று சில இளமை முறுக்குடைய வீரர்கள் பேசிக்கொள்கிறார்களாம். பொறுத்திருக்க வேண்டுமென்று அவர்களுக்கு நீங்கள் சொல்ல வேண்டும்” என்று கேட்டுக் கொண்டான்.

அன்று யாவரும் ஒன்றாக இருந்து உண்ணும் போது ஔவையார் வந்தார். எல்லோரையும் பார்த்தார். அதிகமான் சொன்னபடி செய்தார். வீரர்களுக்கு நல்லுரை பகர்ந்தார் :