பக்கம்:அதிகமான் நெடுமான் அஞ்சி.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முற்றுகை

83

கடைகோலை வீட்டின் இறப்பிலே செருகியிருப்பார்கள். அதைப் பார்த்தால், அதன் இயல்பு தெரியாதவர்களுக்கு என்னவோ கோல் என்று தோன்றும். ஆனால் எப்போது நெருப்பு வேண்டுமோ அப்போது அதை எடுத்துக் கட்டையைக் கடையத் தொடங்குவார்கள். கடையக் கடைய நெருப்புப் பிறந்து கொழுந்துவிடும். அப்போதுதான் அந்தக் கோலின் பெருமை தெரியும். அந்தத் தீக்கடைகோலைப் போன்றவன் நம் மன்னன்.”

ஔவையார் சிறிது பேசாமல் இருந்தார். உவமையை எதற்காகச் சொன்னார் என்று முன் இருந்தவர்கள் சிந்திக்கத் தொடங்கினார்கள். அப்புலமைப் பிராட்டியாரே உவமையை விளக்க முன்வந்தார்: “அந்தத் தீக் கடைகோல் வீட்டின் இறப்பிலே செருகியிருக்கும்போது தன் ஆற்றல் தோன்றாமல் வெறும் கோலாக இப்பதுபோல, மிடுக்கு அற்றவனைப் போல் அமைந்திருக்கும் இயல்பும் நம் அரசனிடம் உண்டு. தான் தோன்றாமல் இருக்கவும் வல்லவன் அவன். செவ்வி நேர்ந்தபோது அந்தக் கடைகோலில் எரிமுறுகி எழுந்து கொழுந்து விட்டுப் புறப்படுவது போல அவன் புறப்படவும் வல்லவன். இன்ன காலத்தில் இது செய்ய வேண்டும் என்பதை உணர்ந்தவன் அவன். கிடக்கும்போது கிடந்து பாயும்போது நன்றாகப் பாயவல்ல பெரு வீரனையல்லவா நாம் மன்னனாகப் பெற்றிருக்கிறோம்?” பேச்சை முடித்த மூதாட்டியார் பொருள் செறிந்த பாடல் ஒன்றைச் சொன்னார்.

உடையன் ஆயின் உண்ணவும் வல்லன்;
கடவர் மீதும் இரப்போர்க்கு ஈயும்
மடவர் மகிழ்துனை, நெடுமான் அஞ்சி,
இல்இறைச் செரீஇ ஞெலிகொல் போலத்
தோன்றாது இருக்கவும் வல்லன்; மற்று அதன்