பக்கம்:அதிகமான் நெடுமான் அஞ்சி.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

அதிகமான் நெடுமான் அஞ்சி


கான்றுபடு கனைஎரி போலத்
தோன்றவும் வல்லன்,தான் தோன்றுங் காலே.

[உடையன் ஆயின் - உணவுக்குரிய பொருள்வளத்தை உடையனாக இருந்தால். கடவர்மீதும் - தான் காப்பாற்றக் கடமைப்பட்ட வீரர்களைவிட மிகுதியாக. ஈயும் அஞ்சி - துணையாகிய அஞ்சி. மடவர் - அறிவில்லாதார். இல் இறை - வீட்டின் இறப்பில். செரீஇய - செருகிய. ஞெலிகோல் - தீக் கடைகோல். கான்று - கனிந்து. படு - எழும். கனை எரி - கொழுந்துவிடும் நெருப்பு.]

ஔவையார் நல்லுரையும் பாடிய பாட்டும் வீரர்களின் வேகத்தை மாற்றி அமைதி பெறச் செய்தன.

வெளியிலே அன்று சேரமான் படைத் தலைவர்களோடு பேசினான். “விளையாட்டுப் போல இரண்டு மாதங்கள் ஆயினவே! எத்தனை நெல்லைத்தான் அவன் சேமித்து வைத்திருக்க முடியும்?” என்று கேட்டான்.

“ஒருகால் உள்ளேயே வயல்கள் இருக்குமோ?” -கேட்டவன் நெடுங்கேரளன்.

“தெய்வம் உணவு கொண்டுபோய் ஊட்டுமோ என்று கேள் அப்பா” என்றான் மன்னன்.

“இதில் ஏதோ சூது இருக்கிறது. உணவு வெளியிலிருந்துதான் போகவேண்டும்” என்று, யோசனையில் ஆழ்ந்திருந்த காரி கூறினான்.

அவன் கூறியதுதான் உண்மை. தகடூர்க் கோட்டைக்குள் சுருங்கையின் வழியாக நெல்லும் மற்ற உணவுப் பொருள்களும் யாரும் அறியாமல் இரவு நேரத்தில் போய்க் கொண்டிருந்தன. அந்த இரகசியம் சேரமானுக்குத் தெரியாது.

“அப்படியானால் கோட்டையைச் சுற்றி ஆராய வேண்டும்; இரவு நேரங்களில் விழிப்பாக இருந்து கவனிக்கவேண்டும்” என்றான் அரசன்.