பக்கம்:அதிகமான் நெடுமான் அஞ்சி.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88

அதிகமான் நெடுமான் அஞ்சி

ஆழ்ந்துபோவாள். “ஆமாமடி பெண்ணே, நீ இராசாத்தியாகப் பிறக்க வேண்டியவள்தான்” என்பாள்; அடுத்து, “உன்னைத் தட்டிக்கொண்டு போக எந்த ஆண்பிள்ளை பிறந்திருக்கிறானோ?” என்பாள்.

ஒரு நாள் அந்தப் பெண்ணைக் காணாவிட்டால் அரசிக்குப் பொழுது போகாது. அவள் அழகியாக இருந்ததோடு அறிவுச் சிறப்பும் உடையவளாக இருந்தாள். நன்றாகப் பேசினாள். இங்கிதம் அறிந்து பழகினாள். எப்போதாவது அரசிக்கு மனவருத்தம் இருந்தால் சிரிக்கச் சிரிக்கப் பேசி அவளுக்கு இருந்த வருத்தத்தை மறக்கும்படி செய்வாள்.

சிறுமியாக இருக்கும்போது அவள் நினைத்தபோதெல்லாம் அரண்மனைக்கு வந்துகொண்டிருந்தாள். பருவ மங்கையாக மிளிரத் தொடங்கியபின் நாலு பேர் கண்ணில் படும்படி வருவதில்லை; யாரும் காணாதபடி ஒதுங்கி ஒதுங்கி அந்தப்புரத்துக்குப் போவாள். அரசி பல அந்தரங்கச் செய்திகளையும் அவளிடம் சொன்னாள். அரண்மனையிலிருந்து வெளியே போவதற்கு ஒரு சுரங்க வழி இருக்கிறதென்ற இரகசியத்தைக்கூடச் சொன்னாள்.

ஒரு நாள் அரசி அரண்மனைக்கு வெளியே போக வேண்டியிருந்தது. அன்று ஏதோ சிறப்பான நாளாதலால் கோட்டைக்குள் பெருங் கூட்டம். வெளியிலே உள்ள இறைவன் திருக்கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்துகொண்டு உடனே வர எண்ணினாள் அரசி. அப்போது அந்தப் பெண் வந்திருந்தாள். அவளைத் துணைக்கு அழைத்துக்கொண்டு சுருங்கை வழியே புறப்பட்டு வெளியிலே வந்தாள். யாருக்கும் தெரியாமல் வந்து, தரிசனம் செய்துவிட்டு, மீட்டும் அந்த வழியே அரண்மனைக்குப் போய்விட்டாள். அரசியுடன் செல்லும்போது சுருங்கையின் அமைப்பையும்