பக்கம்:அதிகமான் நெடுமான் அஞ்சி.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

90

அதிகமான் நெடுமான் அஞ்சி

யிலே நிறுத்திவைத்துவிட்டு, “உங்களுடன் சிறிது தனியே பேச வேண்டும் அம்மா!” என்று அரசியை அழைத்துச் சென்றாள். உள்ளே போனவுடன் அவள் அழத் தொடங்கிவிட்டாள் ; துயரத்தால் விம்மினாள்.

“என்னடி இது? ஏன் அழுகிறாய்?” என்று கேட்டாள் அரசி.

“இனிமேல் இந்த அரண்மனைக்கு நான் வர முடியாதம்மா. பொல்லாதவர்கள் இருக்கிற இடமாகப் போய்விட்டது. நான் மானத்தோடு வாழ எண்ணினால் இங்கே வரக் கூடாது” என்று திக்கித் திக்கிப் புலம்பிச் சொன்னாள்.

“நீ என்ன சொல்கிறாய்? என்ன நடந்தது? சொல்லிவிட்டு அழு.”

“யாரோ உங்கள் தம்பியாம்; என்னைக் கண்டு பல்லை இளிக்கிறான்.”

“என் தம்பியா?”

“ஆமாம்; அவன்தான் சொன்னான். கடவுளே என்னைக் காப்பாற்றினார். அந்தக் கயவன் கண்ணிலே பட என்ன பாவம் செய்தேனோ தெரியவில்லை. இனி அவன் இருக்கும் வரையில் இங்கே என்னால் தலை காட்ட முடியாதம்மா.”

“போடி பைத்தியக்காரி! எவனோ ஒருவன் தவறு செய்தால் அதற்காக நீ என்னைப் பார்க்காமல் இருக்கிறதாவது நான் மன்னரிடம் சொல்லி அவனை ஒறுக்கச் சொல்கிறேன். நீ எப்போதும்போல் வந்து போய்க்கொண்டிரு.”

அந்தப் பெண் கண்ணைத் துடைத்துக் கொண்டாள். வரும்போது ஒரு துணையுடன் வருவதும் போகும்போது அரண்மனையிலிருந்து பெண்துணையுடன் போவதுமாக இருந்தாள்.