பக்கம்:அதிகமான் நெடுமான் அஞ்சி.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

92

அதிகமான் நெடுமான் அஞ்சி

படி நான் அவரிடம் பேசுகிறேன். நீ மறைவாக இருந்து கேள். அப்பொழுதாவது உனக்கு மனம் ஆறுகிறதா, பார்க்கிறேன்” என்று அவளை ஆற்றுவித்தாள்.

அதிகமான் அப்போது வருவான் என்பதை அறிந்தே இதைச் சொன்னாள் அரசி. அந்தப் பெண் ஒரு மறைவிடத்தில் இருந்தாள். சிறிது நேரத்தில் அதிகமான் வந்தான். அவனுடன் அளவளாவினாள் அரசி. பேச்சினிடையே அந்தப் பெண்ணைப் பற்றிச் சொல்லத் தொடங்கினாள்.

“ஏன் ஆடைகளை வெளுத்துத் தரும் பெண் ஒருத்தி நாள்தோறும் இங்கே வந்து போகிறாள். அவள் தன் கடமையை நன்றாகச் செய்து வருகிறாள்.”

“அவளுக்குப் பரிசு கொடுக்க வேண்டுமோ?”

“இல்லை; இல்லை. அவள் இளம் பெண்; இன்னும் மணமாகாதவள்.”

“மணம் செய்துவைக்க வேண்டும் என்று சொல்லப் போகிறாய்.”

“அதுவும் இல்லை. அவள் பார்க்க அழகாக இருப்பாள். நல்ல வளர்ச்சியுடைய உடம்பு.”

“இந்த வருணனைகளெல்லாம் எதற்கு?”

“அவளைக் கண்டு அரண்மனை அதிகாரிகளில் யாரோ கண் அடித்தானாம்.”

அதிகமான் அதைச் சரியாகக் காதில் போட்டுக் கொள்ளவில்லை. மறுபடியும் அத்தாணி மண்டபத்துக்குப் போகவேண்டியிருந்தது. “சரி, சரி; அழகாக இருப்பதே ஒரு கேடு. அவளும் பணத்துக்கு ஆசைப் பட்டுப் பல்லை இளித்திருப்பாள். அதை மட்டும் உன்னிடத்திலிருந்து மறைத்துவிட்டாள் போலிருக்கிறது” என்று அந்த நிகழ்ச்சியைப் பொருட்படுத்தாமலே பேசினான்.