பக்கம்:அதிகமான் நெடுமான் அஞ்சி.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அந்தப்புர நிகழ்ச்சி

93


“அந்தப் பெண் அழுதுகொண்டு வந்து நிற்கிறாள்.”

“அதையெல்லாம் நீ நம்பாதே! அந்த அழுகையையெல்லாம் நாளைக்கே பொருளாக மாற்றுவாள். இந்த மாதிரிப் பெண்களை இங்கே வரவிடுவதே தவறு! சரி சரி; எனக்கு வேலை இருக்கிறது; போய் வருகிறேன்” என்று சொல்லிப் புறப்பட்டுவிட்டான்.

மறைவில் நின்ற ஏழை மங்கை காதில் அதிகமானுடைய பேச்சு நாராசம் போல் விழுந்தது. அவளுக்கு மாத்திரம் ஆற்றலும் வாய்ப்பும் இருந்தால் அந்த நாவைத் துண்டித்திருப்பாள். ‘எத்தனை இழிவாக ஏழைகளை நினைக்கிறான் இந்தக் கீழ் மகன்! அரசனே இப்படி இருக்கும்போது அவன் ஏவலர்கள் கற்புக்கும் மானத்துக்கும் பெண்மைக்கும் எங்கே மதிப்புக் கொடுக்கப் போகிறார்கள் ? இவர்களால் உலகில் அறம் செத்துப் போய்விடும்’ என்று குமுறினாள். அரசி வருவதற்கு முன் மெல்ல நழுவி விட்டாள்.

அரசி வந்து பார்க்கும்போது அவளைக் காணவில்லை. கிணறு வெட்டப் பூதம் புறப்பட்ட கதையாகி விட்டதே என்று அவள் வருந்தினாள். எப்படி யாவது அவளுக்கு ஆறுதல் கூறலாம் என்று வந்தவள், அவளைக் காணாமையினால் பின்னும் துயருற்றாள்.

அன்று போனவள் தான்; அப்பால் அரண்மனைப் பக்கமே அந்தப் பெண் கால் எடுத்து வைக்கவில்லை. அவள் தாய், “ஏன் அம்மா அரண்மனைக்குப் போகவில்லை ?” என்று கேட்டாள். “மானம் மரியாதையுள்ளவர்கள் போகிற இடம் அன்று அது” என்று சுருக்கமாகச் சொல்லி விட்டாள் அவள் பெண். ஏதோ தவறான செயல், அவள் சீற்றத்தைத் தூண்டிவிட்டிருக்க வேண்டுமென்று தாய் உய்த்துணர்ந்து சும்மா இருந்துவிட்டாள்.

அதிக-7