உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அதிசயப் பெண்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

அதிசயப் பெண்

போகிறது என்றே அது எண்ணியது. உடனே இரைந்த குரலில், “நரி அண்ணா, அவசரப்படாதே. அந்த இட்டிலியை நீயே தின்னலாம்; இந்த மிளகாய்ப்பொடியையும் போட்டுக்கொண்டு தின்னலாம். எனக்கு வேண்டாம். பாவம்! இவ்வளவு நேரம் காத்துக்கொண்டிருந்தாயே. எனக்கு வேறு இட்டிலி கிடைக்கும்” என்று சொல்லிக்கொண்டே பக்கத்தில் வந்தது.

நரிக்கு ஆச்சரியமாகப் போய்விட்டது. இட்டிலி முழுவதையும் தானே சாப்பிட வேண்டும் என்ற பேராசை அதற்கு இருந்தது. ஆனாலும், காக்கை இப்படிச் சொல்லும் என்று அது எதிர்பார்க்கவில்லை. “என்ன தம்பி சொல்கிறாய்?” என்று சொல்லிக் கையில் இருந்த இட்டிலியை நரி கீழே வைத்தது. வைத்ததுதான் தாமதம்; மறு கணத்தில் காக்கை தன் வாயில் பிடித்திருந்த கிண்ணத்திலிருந்த மிளகாய்ப்பொடியை அப்படியே நரியின் கண்மேல் கொட்டிவிட்டு, அது கண்ணைத் துடைப்பதற்குள் இட்டிலியைக் கவ்விக்கொண்டு பழைய மரத்தின்மேல் உட்கார்ந்துகொண்டது.

நரியோ மிளகாய்ப்பொடி விழுந்ததனால் கண்ணைத் திறக்க முடியாமல் கஷ்டப்பட்டது; எரிச்சல் தாங்க முடியவில்லை “ஐயோ! ஐயோ!” என்று கதறியது.

காக்கை, “நரியண்ணா, மிளகாய்ப்பொடி எப்படி இருக்கிறது? இட்டிலியினால் உன்னுடைய நாக்கில் நீர் சுரந்தது. இப்போது மிளகாய்ப்பொடியினால் கண்ணிலே நீர் சுரக்கிறது. நல்ல வேளை! இவ்வளவு நேரத்தில் இட்டிலியை விழுங்காமல் இருந்தாயே! உனக்கு வந்தனம்” என்று சொல்லிவிட்டு, இட்டிலியைத் தின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அதிசயப்_பெண்.pdf/32&oldid=1482022" இலிருந்து மீள்விக்கப்பட்டது