இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
ஓர் அரசகுமாரன் தனக்கு ஏற்ற மனைவியைத் தானே தேடிக்கொள்ள எண்ணினான். அழகும் அறிவும் பொறுமையும் உடைய பெண் ஒருத்தியைத் தேர்ந்தெடுக்க விரும்பினான். அதற்காக அவன் சாமான்ய மனிதனைப்போல ஆடை அணிந்து, தன் தலைநகரை விட்டுப் புறப்பட்டான்.
பல இடங்களுக்குப் போய்க் கடைசியில் ஒரு சிறிய ஊர் வழியே நடந்துகொண்டிருந்தான். அப்போது ஒரு பெண் தன் தலையின்மேல் ஒரு சட்டியில், வயலில் வேலை செய்யும் தன் தந்தைக்குக் கஞ்சி எடுத்துக்கொண்டு போனாள். அவள் இயற்கையாகவே நல்ல அழகும் பலமும் உடையவளாக இருந்தாள். ‘இவள் அழகுள்ளவளாக இருக்கிறாள். இவளை யாரென்று விசாரிக்கலாம்’ என்று எண்ணிய அரச குமாரன் அவளைப் பார்த்து, “ஏ, பெண்ணே! உன் பெயர் என்ன?” என்று கேட்டான்.