பக்கம்:அதிசயப் பெண்.pdf/39

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
37
அரசகுமாரன் சோதனை


அந்தப் பெண், “வெண்ணெய்!” என்றாள்.

“நவநீதமா?” என்று ராஜகுமாரன் கேட்டான். “இல்லே, சாதாரண வெண்ணெய் அல்ல. மண்ணால் பண்ணாத் சட்டியிலே, மரத்தால் பண்ணாத மத்தாலே, மட்டையால் பண்ணாத கயிற்றாலே கடைந் தெடுத்தது. அந்த வெண்ணெய் இங்கே முன்பும் இல்லை; இன்றும் இல்லை. நாளைக்கும் இராது.”

தேவலோகத்தில் பாற்கடலில் மேரு மலையை மத்தாகக் கொண்டு வாசுகியைக் கயிறாக வைத்துக் கடைந்த அமுதத்தை அவள் குறிக்கிறாள் என்று ஊகித்துக்கொண்டான் ராஜகுமாரன்.

“அமுதவல்லியா?” என்று பிறகு கேட்டான்.

“ஆம்” என்றாள் அந்தப் பெண்.

“யாருக்குக் கஞ்சி கொண்டு போகிறாய்?”

“என் முதல் தெய்வத்துக்கு.”

“உன் தகப்பனாருக்கா?”

“ஆம்.”

“அவர் என்ன செய்கிறார்?”

“ஒன்றை இரண்டாக்குகிறார்!”

“மண் கட்டியை உடைத்து உழுகிறாரோ?”

“ஆம்.”

“எந்த இடத்தில் உழுகிறார்.”

3