பக்கம்:அதிசயப் பெண்.pdf/41

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அரசகுமாரன் சோதனை

39

அவள் வீட்டில் பெண் கொள்ள வேண்டும் என்று வந்திருப்பதாகவும், தான் மிகவும் பணக்காரன் என்றும் சொன்னான். அப்படிப் பேசிக்கொண்டிருந்த போது வயலுக்குக் கஞ்சி கொண்டு போன அமுதவல்லி திரும்பி வந்துவிட்டாள்.

“மாமி, மாமி, உங்கள் பெண்ணை இன்று சமையல் செய்யச் சொல்லுங்கள். நான் பணம் தருகிறேன். வேண்டியதை வாங்கி, வேண்டியபடி செய்யச் சொல்லுங்கள். ஒரு பிள்ளைக்காரியைக் கறி பண்ணி, பாவாடைக்காரியைக் குழம்பு பண்ணி, பாண்டியன் தேவியை ரஸம் பண்ணி எனக்கு விருந்திட வேண்டும்” என்றான்.

அமுதவல்லி, “அப்படியே செய்கிறேன்” என்று சொல்லி, வேண்டிய காய்கறிகளைத் தன் தாயைக் கொண்டு வாங்கி வரச்சொன்னாள். சமையல் செய்து பரிமாறினாள்.

ஒரு தாறு மாத்திரம் போடும் வாழையின் காயைக் கறி பண்ணியிருந்தாள். கத்திரிக்காயைக் குழம்பு பண்ணினாள். பாண்டியனுக்கு மாலையிடும் வேப்பம் பூவால் ரஸம் பண்ணியிருந்தாள்.

அரசகுமாரன் சாப்பிடும்போது ரஸத்தை அவள் மீது துப்பினான். அவள் கோபம் கொள்ளாமல் பரிமாறினாள். சோற்றை வாரி இறைத்தான். அவள் அப்போதும் கோபம் கொள்ளவில்லை. அவள் பொறுமைசாலி என்பதை அப்போது உணர்ந்து கொண்டான்.