பக்கம்:அதிசயப் பெண்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



இணைந்த அழகு

45

அந்தப் பறவையும் விலங்கும் அதிகப் பசியோடு வந்தவை. ஆகையால் முதலில் தமக்குப் பிரியமான உணவை உண்பதிலேயே தம்முடைய முழுக் கவனத்தையும் செலுத்தின. ஒருவிதமாக முதற் பசியை ஆற்றிக்கொண்ட பிறகு மேலே இருந்த காக்கை தன் பார்வையைக் கொஞ்சம் கீழே திருப்பியது. தன்னைப் போலவே ஏகாக்கிரசித்தத்தோடு அந்தவேப்ப மரத்திலே விருந்துண்ணும் ஒட்டகத்தைப் பார்த்தபோது தன்னை அறியாமலே அதன்பால் அன்பு உண்டாயிற்று. அதனுடைய உயரமான உருவத்தை அடிமுதல் முடிவரையில் உற்று நோக்கியது. ஈசுவர சிருஷ்டியில் எவ்வளவோ பிராணிகளைக் காகம் பார்த்திருக்கிறது. இதுவரையில் அந்தமாதிரி உன்னதமான பிராணியை அது பார்த்ததே இல்லை. அதைக் காட்டிலும் உன்னதமான-—உயரமான —ஒரு சிருஷ்டி பிராணி யுலகத்திலே உண்டோ என்று கூட அது நினைக்கத் தொடங்கியது.

ஒட்டகத்தின் உயரம் கிடக்கட்டும். எந்தப் பிராணியிடத்திலும் காணப்படாத ஒரு தனி விசேஷம் அதனிடம் இருந்தது. அவ்வளவு உயரமான உருவத்தில் எல்லாம் கோணல் மயம். தலை கோணல்; கழுத்துக் கோணல்; உடம்போ கோணல்கள் நிறைந்து விளங்குவது. ஓரிடமாவது நேராக இருக்க வேண்டுமே! வளைந்து வளைந்து செல்லும் அந்தக் கோணல்களை அழகின் திவலைகளாகக் கண்டு பிரமித்தது காக்கை."என்ன ஆச்சரியம்!” என்று வாய் திறந்து கூறிவிட்டது. மனத்துள் தோன்றிய உணர்ச்சி அதை அறியாமலே வெளிப்பட்டபோது அதன் குரல் ஒட்டகத்தின் காதில் விழுந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அதிசயப்_பெண்.pdf/47&oldid=1482997" இலிருந்து மீள்விக்கப்பட்டது