பக்கம்:அதிசயப் பெண்.pdf/54

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது52

அதிசயப் பெண்

மிகவும் பொல்லாதது. இதற்கு ஒரு கஷாயம் போட வேண்டும். கத்திரி வேரும் வேறு சரக்கும் சேர்த்துக் காய்ச்சி அந்தக் கஷாயத்தைத் தயார் செய்யவேண்டும்’ என்றார்.

“கத்திரி வேர்தான பிரமாதம்! நம் வீட்டுக் கொல்லையிலே இருக்கிறது” என்றான் மட்டியப்பன்.

“ஒரு மணங்கு வேர் வேண்டும். நான் வீட்டுக்குப் போய்க் கஷாயம் போட ஏற்பாடு செய்கிறேன். நீ வேரை அனுப்பு” என்று உத்தரவு செய்துவிட்டு வைத்தியர் மிடுக்காகத் தம் வீட்டுக்கு நடந்தார். மட்டியப்பன் அவசர அவசரமாகத் தன் வீட்டுப் புறக்கடைப் பக்கம் போனான். வேகமாக இருபது முப்பது கத்திரிச் செடிகளைப் பிடுங்கி வேரை வெட்டிக் கையில் எடுத்துக்கொண்டு வைத்தியர் விட்டுக்கு ஓடினான். வைத்தியருக்கு முன் அந்த வேரைப் போட்ட போது அவர், இது எந்த மூலைக்கப்பா போதும்? இதைப் போல இன்னும் பத்துப் பங்கு வேணுமே. இந்த வியாதிக்கு வழுதுணை வெப்பு என்று பேர். சரியானபடி கஷாயம் செய்து கொடுக்காவிட்டால் கேட்காதே. பாவம்! உனக்கு ஒரு மகள். அவளுக்கு இப்படியா வரவேண்டும்!” என்றார்.

“எங்கள் வீட்டுக் கொல்லையிலுள்ள செடியெல்லாம் பிடுங்கிக்கொண்டு வந்துவிடுகிறேன். எப்படியாவது என் மகள் பிழைத்தால் போதும். நீங்கள்தான் தெய்வமாக இருந்து காப்பாற்ற வேண்டும்’ என்று சொல்லி மட்டியப்பன் மறுபடியும் தன் வீட்டிற்கு ஓடினான்.