பக்கம்:அதிசயப் பெண்.pdf/55

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.கத்திரிக்காய் ஜாரம்

53

தன் வீட்டில் உள்ளவர்களையும் கூப்பிட்டு எல்லாக் கத்திரிச் செடிகளையும் பிடுங்கினான். வேரை கறுக்கிக் கட்டாகக் கட்டி வைத்தியரிடம் கொண்டுபோய்ப் போட்டான்.

“நல்ல வேளை! அகப்படக் கூடிய சரக்காக இருக்கிறதே! அது உன் அதிர்ஷ்டத்தான். மலேச்சர்க்கு ஏதாவது வேண்டுமென்றால் நாம் என்ன செய்வது? சரி. இனிமேல் நீ பயப்பட வேண்டாம். இன்னும் ஒரு வாரத்தில் உன் மகள் செளக்கியம் அடைவாள்.”

வைத்தியர் ஒரு கஷாயத்தை ஒவ்வொரு வேளையும் நோயாளிக்குக் கொடுத்து வந்தார். ஆனால், அந்தக் கஷாயத்திற்கும் கத்திரி வேருக்கும் சம்பந்தமே இல்லை. ‘வழுதுணை வெப்பு’ என்பதற்குக் கத்திரிக்காய் ஜுரம் என்று அர்த்தம். வைத்தியர் தாமாகச் சிருஷ்டித்த அந்தப் பெயரை மறைபொருளாகச் சொன்னார். மட்டியப்பன் அதைத் தெரிந்துகொள்ளவில்லை.

அவன் மகள் செளக்கியம் அடைந்தாள். அவன் மனைவி அவனைப் பார்த்து, “அன்றைக்கு வைத்தியர் நாலு கத்திரிக்காய் கேட்டார்; கொடுக்கமாட்டேன் என்று சொன்னோமே, இப்போது வேரோடு கத்திரிச் செடி எல்லாவற்றையும் தாமே பிடுங்கினோமே!” என்றாள்.

“அப்போது புத்தி இல்லை!” என்று வருத்தப்பட்டான் மட்டியப்பன்.