பக்கம்:அத்தை மகள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



5

காலம் தன்னை ஏமாற்றிவிடும் என்று எண்ணியவனல்ல அவன். காலம் கிடக்கட்டும்! தன் அன்புக்கு உரிய---தன்மீது அளவற்ற ஆசை கொண்டிருந்த அத்தை மகள் ரத்தினம் தன்னை இப்படி வஞ்சித்துவிடுவாள் என்று அவன் சொப்பனம் கூடக் கண்டதில்லை. காலம் அவளை மாற்றிவிடும் என்று அவன் நினைத்ததில்லை. யாராவது அவ்விதம் சொல்லியிருந்தாலும் அவன் நம்பியிருக்கமாட்டான்.

காலம் கைதேர்ந்த மருத்துவன் என்கிறார்கள். அதே காலம் பெரிய காயங்களையும் உண்டாக்கி விடுகிறது. என்பதையும் ஒப்புக்கொள்ளத்தானே வேண்டும்?

பார்க்கப்போனால், காலத்தை மட்டும் பழித்துத் தான் என்ன பயன்? மனிதர்களின் செயல்களும் எண்ண்ங்களும் தானே ஒவ்வொருவரையும்---பலரையும்---பலவிதமாகப் படுத்தி வைக்கின்றன?

மனிதன் பொறுப்பைத் தட்டிக் கழிக்கவே விரும்புகிறான். தவறுதலின் சுமையை யார் தலையிலாவது --- அல்லது எதன் மீதாவது --- சுமத்தி விடத் தயாராக இருக்கிறான். அவனுக்குக் கை கொடுக்கின்றன. கடவுள், தலைவிதி, காலம் என்பவையெல்லாம்.

இவற்றின் மீது பாரத்தைப் போட்டுவிட்டு தம் பொறுப்பை---தம் செயல்களின் விளைவை---மறந்துவிட முயல்கிறவர்களையும், பிறரைக் குறை கூறிக்கொண்டிருப்பவர்களையுமே அதிகம் காண முடிகிறது எங்கும்.

சுந்தரம் காலத்தின் மீது பழி சொன்னான். அவனுடைய அத்தை 'எல்லாம் தலைவிதி. இப்படி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அத்தை_மகள்.pdf/27&oldid=1068644" இலிருந்து மீள்விக்கப்பட்டது