பக்கம்:அத்தை மகள்.pdf/34

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

கடைசிச் சந்திப்பில் அவள் நடந்து கொண்டது, அவளது அன்பு அணைப்பு...அழுகை படிந்த முகம். கண்ணீர் முத்துக்களும் கண்களும்-எல்லாம் நெஞ்சைக் குத்தும் நினைவு ஈட்டிகளாயின.

சிறு வயதில் அவள் துடுக்குத்தனமாக முத்தமிட்டதும், பக்கத்தில் வந்து உட்கார்ந்ததனால் பெண்கள் கிண்டல் செய்யவும் அவள் சீற்றமாக பதில் சொன்னதும் அவன் நினைவில் குமிழிட்டன.

'ஆமாம். அவள் ஒரு மாதிரித்தான்' என்று கூறியது மனம்.

அவளே அவன் கேலி செய்து அழ வைத்தது நினைவில் எழுந்தது. அவற்றுக்கெல்லாம் வஞ்சகம் தீர்த்துக் கொண்டாளோ என்னவோ-இப்பொழுது இப்படி நடந்து என்னை அழவைத்து?.....

'அஞ்சும் மூணும் எட்டு.... அத்தை மகளை...சே, இதை நினைப்பானேன்? அத்தை மகள் லட்சணம் தான் ஊர் சிரிக்குதே-ஆமாம், ஊர் சிரிக்கத்தான் செய்யும். சின்னப்பயல்கள் கத்துவார்களே - காத்திருந்தவன் பெண்டாட்டியை நேத்து வந்தவன் கொண்டுபோனான் என்று-அதைச்சொல்லிச் சிரிப்பார்கள்-என்ன செய்ய முடியும் என்னால் எல்லாம் காலம் செய்து வைப்பது தானே....'

அவன் சுடுமூச்சு உயிர்த்தான். இதய வேதனையை ஆற்றிக்கொள்ள அழுவதும் பெருமூச்செறிவதும் தவிர வேறு ஏதாவது வழி இருக்கிறதா என்ன ?

இருந்தாலும் இருக்கலாம், ஆனால் அது அவனுக்குத்தெரியாது.

முடிந்தே விட்டது !
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அத்தை_மகள்.pdf/34&oldid=982666" இருந்து மீள்விக்கப்பட்டது