பக்கம்:அநுக்கிரகா.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102

அநுக்கிரகா

"வாம்மா! பிரமாதமான ஒட்டு வித்தியாசத்திலே ஜெயிச்சிருக்கே, மகிழ்ச்சி," என்று முகமலர்ந்த தலைவருக்குப் பொன்னுரங்கம் பிரித்துத் தந்த மாலையை அவள் அணிவிக்க முயல, உன்னை மாதிரிப் பொண்ணு கழுத்திலே மாலை போடறது தமிழ்ப் பண்பு இல்லை," என்று தடுத்துக் கையிலேயே வாங்கிக் கொண்டார் தலைவர்.

முத்தையாவை பற்றிச் சொன்னான் பொன்னுரங்கம். "என்னப்பா இது, இவரைத் தெரியாமலா? அந்த நாளிலே ஜஸ்டிஸ் பார்ட்டியிலே பெரிய புள்ளியாச்சே?"

முத்தையா அகமகிழ்ந்தார். பூரித்தார். "உங்க தலைமையிலே தொண்டு செய்கிற வாய்ப்பு என் மகளுக்குக் கிடைச்சது என் பாக்கியம்."

பொன்னுரங்கம் கைகட்டி, வாய்ப் பொத்தி, மரியாதை யாக மெல்ல ஆரம்பித்தான்:

"நம்ம பார்ட்டி சார்பிலே ஜெயிச்சியிருக்கிற தாய்க் குலத்திலேயே இவங்கதான் அதிகம் படிச்சவங்க, இளவயசுக் காரங்க, ஆக்ஸ்ஃபோர்டிலே படிச்சவங்க."

"அதிகம் படிச்சவங்க மட்டுமில்லே. ரொம்ப அழகானதும் இவங்க தாம்ப்பா," என்று சொல்லித் தலைவர் புன்னகை பூத்தார். அநுக்கிரகாவுக்கு முகம் லேசாகச் சிவந்தது. அழகிய முகத்தில் புன்னகை இழையோடியது. தலைவராக அவர்களுக்கு விடை கொடுத்துக் கிளம்பச் சொல்லாவிட்டாலும், வெளியே நிறையப் பேர் காத்திருக்கிறார்களே என்ற உறுத்தலில் அவர்கள் மூவரும் எழுந்து வணங்கி விடைபெற்றார்கள். தலைவர் அவர்களுக்கு விடை கொடுத்துவிட்டு மறுபடியும் கொய்யாக் காய்க் குப்புசாமி செய்தியில் மூழ்கினார்.

வெளியே காத்திருந்தவர்கள் அநுக்கிரகாவையும், முத்தையாவையும், பொன்னுரங்கத்தையும் பொறாமையோடு பார்த்தனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அநுக்கிரகா.pdf/104&oldid=1263992" இலிருந்து மீள்விக்கப்பட்டது