பக்கம்:அநுக்கிரகா.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106

அநுக்கிரகா

அநுக்கிரகா புதிய மந்திரி சபையில் வீட்டு வசதி அமைச்சராகப் பதவி ஏற்கக் கூடும் என்று நம்பத் தகுந்த வட்டாரங்களிலிருந்து தெரிகிறது'——என்ற கடைசிப் பாரா எல்லாச் செய்தித் தாள்களிலும் தடித்த எழுத்துக்களில் பிரசுரமாகி இருந்தது.

வெற்றிச் சிரிப்புடனும் மாலைப் பத்திரிகைகளுடனும், முத்தையாவையும், அநுக்கிரகாவையும் சந்திக்க வந்தான் பொன்னுரங்கம். இருவரும் சந்தேகத்தோடு அவனை வினவினர்:

"அதெப்படி? இவங்களா முடிவு பண்ணிட்டாங்களா என்ன? 'ஹவுஸிங் மினிஸ்டர்'னு போர்ட்ஃபோலியோ கூட ஹேஷ்யத்திலேயே போட்டிருக்காங்களே?"

"என்ன போட்டிருக்காங்களோ அது நான் சொல்லி போடச் சொன்னதுதான். அரசியல்லே இது ஒரு உத்தி, நாம் நினைக்கிறதை —— ஆசைப்படறதை —— எல்லாருமே நம்பத்தகுந்த வட்டாரங்களிலே பேசற மாதிரி பேப்பர்லே வர்ற மாதிரிப் பண்ணிடணும். அப்புறம் அதை யாரும் மறுக்க மாட்டாங்க. பயப்படுவாங்க. அதுவே உண்மை போல ஆயிடும்."

"இருக்கலாம். ஆனா, என்னை விட சீனியரா ரெண்டு மூணு வாட்டியா எம்.எல்.ஏ. பதவி வகிச்சவங்கள்ளாம் இருக்கிறப்போ என்னை மத்திரியாக விட்டுருவாங்களா?"

"விடறாங்களா இல்லையான்னுதான் பாருங்களேன்? இன்னும் மூணு நாளிலே இதே நியூஸ் பேப்பருங்களிலே, அநுக்கிரகாதான் பெண்கள் சார்பில் அமைச்சராகணும்னு மற்ற அஞ்சு பெண் எம்.எல்.ஏ.க்களுமே அவங்களா அறிக்கை விட்டுத் தலைவரை வேண்டிக்கப் போறாங்க."

"அது எப்படி சாத்தியம் பொன்னுரங்கம்?"

"ஒரு காரையும், கொஞ்சம் பணத்தையும் எங்கிட்டக் குடுத்துப் பாருங்க. ரெண்டே நாளிலே முடிச்சுக் காட்றேன்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அநுக்கிரகா.pdf/108&oldid=1263999" இலிருந்து மீள்விக்கப்பட்டது