பக்கம்:அநுக்கிரகா.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

9

 கடையிலோ இருக்கிற மாதிரி அங்கே கூட்டம். நிற்கக்கூட இடம் இல்லை. உட்காருவதைப் பற்றி எண்ணியும் பார்க்க முடியாது.

ஆவாரம்பட்டு ஜமீன் திவான் பகதூர் சர். வி.டி. முத்தையா என்று அச்சிடப்பட்ட. விசிட்டிங் கார்டைக் கொடுத்து அனுப்பினார். அப்படியும் பயனில்லை. மூன்று நாள் இப்படியே நடந்தது. நாலாவது நாள் வெளியே புறப்படும் எண்ணத்தோடு அறையிலிருந்து காருக்கு வந்த எம்.எல்.ஏ.யிடம், "ஐயாம் வி.டி.முத்தையா" என்று தாமே முன் சென்று அறிமுகப்படுத்திக் கொண்டார்.

"இப்போ அவசரமாகப் போய்க்கிட்டிருக்கேன். நாளை ராத்திரி ஒன்பது மணிக்குப் பார்ட்டி ஆபீசுக்கு வாங்க, பார்க்கலாம்," என்று கூறிவிட்டு அவர் முகத்தைக்கூட ஏறிட்டுப் பார்க்காமல் பொறுமையின்றிக் காரில் போய் ஏறிக் கொண்டான் எம்.எல்,ஏ.

முத்தையாவுக்கு அவமானப்பட்டுவிட்ட உணர்ச்சி. யுத்த காலத்தில் சில ஆண்டுகள் லண்டனில் இருந்தபோது குறித்த நேரத்தில் குறித்தபடி சென்று சர்ச்சிலைச் சந்தித்துப் பேசியிருக்கிறார். மிகவும் முயன்று இண்டர்வியூ நேரம் கேட்டுப் பெற்றுப் பக்கிங்ஹாம் பாலஸ் சென்று அரசியைக் கூட இரண்டு நிமிடம் சந்தித்திருக்கிறார்; கையுறையாக மலர்ச் செண்டும் அளித்திருக்கிறார்.

இன்று சுதந்திரம் பெற்ற சொந்த நாட்டில் தன்னுடைய தொகுதி எம்.எல்.ஏ.யை வேலை மெனக்கிட்டு நாலு நாள் காத்திருந்தும் பார்த்துப் பேசத் திண்டாடும் நிலை அந்த முதியவருக்கு எரிச்சலூட்டியது. பொறுமையை இழக்காமல் அவனைத் தேடி அவர் மறுநாள் இரவு போன போதுகூடச் சந்திக்க முடியவில்லை. பத்தாயிரம் ரூபாய் ரொக்கத்தோடு வந்தால் அந்தப் பிரச்சினையைக் கவனிக்கலாம் என்று உதவியாளன். ஒருவன் மூலம் அவருக்குச் சொல்லி அனுப்பப்பட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அநுக்கிரகா.pdf/11&oldid=1267814" இலிருந்து மீள்விக்கப்பட்டது