பக்கம்:அநுக்கிரகா.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112

அநுக்கிரகா

என்று கையொப்பமிட்டு ஒரு லட்சம் துண்டுப் பிரசுரம் அச்சிட்டு முன்கூட்டியே நாம் குடிசைப் பகுதிகளில் வினியோகித்து விட வேண்டும்."

"பிரமாதமான ஐடியா பொன்னுரங்கம்; உடனே ஏழுமலையான் பவர் பிரஸ்ஸ்-க்குப் போன் போடு. ஏற்பாடு பண்ணிடலாம்," என்றார் முத்தையா. பொன்னுரங்கத்தின் புத்திக்கூர்மைக்கு ஈடாக எதுவுமே இருக்க முடியாது என்று அவருக்கு அப்போது தோன்றியது.

'தோல்வியில் துவண்டோர் துயர் பல புரியக்கூடும்! வெற்றி விளைந்த நல் முத்துக்களே பொறுப்பீர்!'—என்று தலைப்பிட்டுப் புலவர் எழுதிய துண்டுப் பிரசுரம் அவசர அவசரமாக அச்சிடப்பட்டு, லாரிகள், டிராக்டர்கள், ஜீப்கள் மூலமாக அத்தனை குடிசைப் பகுதிகளிலும் பரப்பப் பட்டு விட்டன. துண்டுப் பிரசுரத்தில் கைகூப்பி வேண்டுவது போன்ற அநுக்கிரகாவின் புகைப்படமும் அச்சிடப் பட்டிருந்தது. தொண்டர் படையும், கட்சி ஊழியர்களும், பொன்னுரங்கத்தின் அடியாட்களும், சைக்கிள் செயின், சவுக்குக் கட்டை, சோடாப் புட்டி சகிதம் குடிசைப் பகுதிகள் முழுவதும் இரவு பகல் பாராமல் ரோந்து சுற்றிப் பாதுகாத்தனர்.

கனிவண்ணன் சதித் திட்டத்தில் இடி விழுந்தது. அசம்பாவிதம் எதுவும் நடக்கவில்லை. குடிசைப் பகுதிகள் பத்திரமாகப் பிழைத்தன. அநுக்கிரகாவும், குடிசைப் பகுதிகளுக்கு ஜீப்பில் போய் அடிக்கடி அவர்கள் குறைகளை விசாரித்துச் சரி செய்து வந்தாள். குடிசைகளை அழித்து விடுவாள் என்று சொல்லியே அவள் எதிரிகள் அவளைப் பற்றிப் பிரசாரம் செய்ததால் வேறு வழியின்றி அவள் குடிசைப் பகுதிகளைச் சுற்றிச் சுற்றியே மலர்ந்த முகமும் கூப்பிய கைகளுமாக வலம்வர வேண்டியிருந்தது. 'மூக்குச் சளி ஒழுகிச் சலை வாய் வடியும் குழந்தைகளை இரு கைகளாலும் வாரி எடுத்து அணைத்து, 'தமிழ்ச் செல்வி' என்று பெயர் சூட்ட வேண்டியிருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அநுக்கிரகா.pdf/114&oldid=1264016" இலிருந்து மீள்விக்கப்பட்டது