பக்கம்:அநுக்கிரகா.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

118

அநுக்கிரகா

தேங்காய் திருடினார்கள். வேறு பல சில்லறைத் திருட்டுக்களும் நடந்தன. இதற்கெல்லாம் விடிவு தேடிப் போய் அங்கே பட்ட அவமானத்தில் தான் மகளை அரசியல்வாதியாக்கினார் முத்தையா. மகளோ தானும் வெகுஜன உணர்வு என்ற வெள்ளத்தில் மூழ்கி விட்டாள். எதிர் நீச்சலிட அவளுக்கும் துணிவில்லை.

நிதானமாக முத்தையா கணக்குப் பார்த்தார். அநுக்கிரகாவை அரசியலில் உறுப்பினராக்கிய முதல் நாளிலிருந்து மந்திரியாகும் முன் ரோஸ் கார்டன்ஸ் ஓட்டலில் பத்திரிகைக்காரங்களுக்கு விருந்து கொடுத்த செலவுவரை இருபத்து நாலு லட்சத்து மூவாயிரத்து எழு நூறு ரூபாய் அறுபது காசுகளும் செலவாகியிருந்தன. இந்தப் பெண்ணை ஏழைகளின் ரட்சகியாக உயர்த்தி விடுவதற்கு இருபத்து நாலு வட்சம் செலவழித்த நான், அன்றே கனிவண்ணனுக்கு வெறும் பிச்சைக்காசான பத்தாயிரம் ரூபாயைத் தூக்கி எறிந்து இந்தக் குடிசைகளைக் காலி செய்துவிட்டு, முயன்றிருந்தால் சுற்றியிருந்த புறம்போக்கு நிலங்களையும் ஏதோ ஒரு விலை பேசி மலிவான விலையில் ஜாரி பண்ணிக் கொண்டு இருந்திருக்கலாம். அப்படிச் செய்யாமல் சொந்தப் பெண்ணை அரசியலில் இறக்கிவிட்ட என் புத்தியைச் செருப்பால் அடிக்கணும். தீர்க்க தரிசனம் போல் அந்த எஸ்டேட் ஓனர் அன்றைக்கு, 'இன்னிக்கு எந்த முதலீடும் இல்லாமே வெறுங்கையோட பாலிடிக்ஸ்ல இறங்கற ஒருத்தனுக்குத்தான் அது கோடி கோடியாய்த் திருப்பித் தருது, உங்களை மாதிரியும், என்னை மாதிரியும் வசதியா இருக்கிறவங்களுக்கு அது 'ஒயிட் எலிஃபண்ட்'. நமக்கெல்லாம் அது நஷ்டக் கணக்காகவும் லயபிலிட்டியாகவும் தான் இருக்கும். ஆம் ஐ ரைட்... மிஸ்டர் முத்தையா" என்று கேட்டது சத்திய வாசகம் போல் இன்று நினைவுக்கு வந்தது அவருக்கு.

ஒரு வைராக்கியத்தில் அன்றிலிருந்து - மகளைச் சந்திப்பதை - அவளது அரசாங்க வீட்டுக்குப் போவதை—

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அநுக்கிரகா.pdf/120&oldid=1264113" இலிருந்து மீள்விக்கப்பட்டது