பக்கம்:அநுக்கிரகா.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

127

அரசியலில் இறங்கச் செய்தார். அவளோ சந்தர்ப்ப நிர்ப்பந்தங்களின் கைதியாகி அவரது 'செண்டிமெண்டல் அட்டாச்மெண்ட்' நிறைந்த அந்த ஒரு வீட்டையும் எடுத்து கொண்டு காம்பன்சேஷன் தர உத்தரவிட்டு விட்டாள். குதிரை கீழே தள்ளிக் குழியும் பறித்த கதையாகிவிட்டது. தான் இதைச் செய்யாவிட்டால் தந்தையின் சொத்தைக் காப்பாற்றவே இதைச் செய்யாமலிருந்ததாக எதிர்க் கட்சிகள் தன்னைக் குறை கூறும். 'சேரிட்டி பிகின்ஸ் அட் ஹோம்' என்கிற பாணியில் முதலில் தன் தந்தையின் இடத்தையே குடிசைகளை வீடாக மாற்றும் திட்டத்துக்காக எடுத்துக்கொண்டு நஷ்ட ஈட்டுத் தொகை தர உத்தர விட்டிருந்தாள் அவள்.

'வேறு வழியில்லை! என்னை மன்னியுங்கள்,'—என்று அப்பாவிடம் ஒரு வார்த்தை சொல்லிவிட்டு வந்து விட வேண்டும் என்று அவள் தானே காரை ஓட்டிக்கொண்டு, அவரைக் காணக் கிளம்பினபோது இரவு ஒன்பதேகால் மணி.

ஆவாரம்பட்டு ஹவுஸ் முகப்பிலும் இப்போது பல குடிசைகள் வந்திருந்தன. அந்த குடிசைகளின் முன்புறம் தெரு விளக்கு ஒளியில் 'அநுக்கிரகா நகர்' என்ற போர்டு எழுதியிருப்பதையும் அவள் காரிலிருந்தபடியே பார்த்தாள். அநுக்கிரகா நகர், முதலமைச்சர் நகர் என்று பெயர்களை வைப்பதில் ஒரு தந்திரம் இருந்தது. பேர்களுக்கு அஞ்சி யாரும் வந்து குடிசைகளைக் காலி செய்யச் சொல்ல மாட்டார்கள். அந்தக் குடிசைப் பகுதிகளுக்குப் பாதுகாப்பாக அமையும் தலைவர்களின் பெயர்களையே பார்த்து வைத்தார்கள். ஆவாரம்பட்டு ஹவுஸ் உள்ளே செல்லும் சாலையிலேயே குறுகலான இடைவெளியுள்ள பகுதி தான் மீதமிருந்தது. இராத்திரி நேரமாதலால் ரோட்டிலேயே பாய் விரித்து ஆட்கள் வேறு படுத்திருந்தார்கள், ஆட்கள் மேல் ஏறி விடாமல் காரை மிகவும் மயிரிழையில் செலுத்திக் கவனமாக ஓட்ட வேண்டியிருந்தது. ஏறக்குறையக் குடிசைகளால் தர்ணா செய்யப்பட்ட மாதிரி நடுவே சிக்கி இருந்தது ஆவாரம்பட்டு ஹவுஸ். இங்கே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அநுக்கிரகா.pdf/129&oldid=1265112" இலிருந்து மீள்விக்கப்பட்டது