பக்கம்:அநுக்கிரகா.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

130

அநுக்கிரகா

அதுவரை அசையாமல் படுத்திருந்த முத்தையா தலையைத் திருப்பி நிமிர்த்து உறுத்தலாய் அவளைப் பார்த்தார். அப்பப்பா! அவளால் அந்தக் கடுமையையும் சூட்டையும் தாங்கவே முடியவில்லை. நெற்றிக் கண்ணையும் சேர்த்துத் திறந்து மூன்று கண்களாலும் அவர் அவளைப் பார்ப்பது போல இருந்தது. இன்னும் அவர் அவளை மரியாதையாகவோ பிரியமாகவோ உட்காரச் சொல்லிக் கூட உபசரிக்கவில்லை. வந்த போதிருந்த அதே கடுமை, அதே சூடு, அதே பாராமுகம், அதே வெறுப்பு, அதே இறுக்கம்.

"என்ன சொன்னே இப்போ?"

"மந்திரியா வரலே, உங்க மகளா வந்திருக்கேன்னு சொன்னேன்."

"என் மகளா? அப்பிடி யாரும் இப்போ எனக்கு இல்லியே? தேர்தலுக்கு முன்னாடிவரை 'அநு'ன்னு செல்லமா எனக்கு ஒரு பெண் இருந்தா. அப்புறம் ஒரு எம். எல்.ஏ. —அநுக்கிரகாங்கிற எம். எல். ஏ. —கழுத்து நெறையப் பலிகடாவுக்குப் போட்ட மாதிரி மாலையோட அர்த்த ராத்திரியில் இங்கே ஊர்வலமா வந்தாள். அதுக்கப்புறம் மாண்புமிகு அமைச்சர் அநுக்கிரகான்னு ஒருத்தி இருக்காள்... என் மகள் அநு போயி ரொம்ப நாளாச்சே?"

"இப்படிப் பேசறது உங்களுக்கே நல்லா இருக்கா அப்பா? இங்கே சுவரிலே. மாட்டியிருக்கிற படத்துக்குக் கீழே எல்லாம் தோற்றம்—மறைவுன்னு கூட எழுதிப் போட்டிருக்கீங்க! யாராவது மூணாவது மனுசங்க பார்த்தா என்ன நினைப்பாங்க?"

"என் மகள் போயிட்டதாக நினைப்பாங்க."

"உங்களுக்குப் புத்தி சுவாதீனம் இல்லாமப் போச்சா என்ன?"

"அப்படித்தான் ஊர்ல பேசிக்கிறாங்க. நீயும் நினைக்கிறே! உண்மையிலே புத்தியே எனக்கு இப்பத்தான் தெளிவாகி இருக்கு."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அநுக்கிரகா.pdf/132&oldid=1265115" இலிருந்து மீள்விக்கப்பட்டது