பக்கம்:அநுக்கிரகா.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

131

"தப்பா நினைக்காதீங்கப்பா! ஏழைகளுக்காகப் பல அடுக்கு மாடி வீடுகளைக் கட்டறது எங்க தேர்தல் 'மானி ஃபெஸ்டோவில' நாங்களே சொல்லியிருக்கிற விஷயம்."

"தேர்தல் மானிஃபெஸ்டோவில சொல்லியிருக்கிற எல்லாத்தையுமே செய்துடுவீங்களா?"

"எதைச் செய்யலேன்னு சுட்டிக் காட்டுங்க, உடனே செய்யறோம்."

"ரூபாய்க்கு நாலு கிலோ அரிசி அனைவருக்கும்—சமவாய்ப்புன்னெல்லாம் போட்டிருக்கீங்களே; அதெல்லாம் செஞ்சீங்களா? சம வாய்ப்புன்னா என்ன அர்த்தம்? கொஞ்சம் நீதான் சொல்லேன். தெரிஞ்சுக்கிறேன்."

"ஏழை பணக்காரன்கிற வித்தியாசமின்றி எல்லாருக்கும் நன்மை செய்யறது."

"எங்கே அப்பிடிச் செய்யறீங்க....? அப்பன் பணத்திலே இருப்பத்தைஞ்சு லட்சம் தண்ணியாச் செலவழிச்சு எம். எல், ஏ, ஆகி மந்திரியாகி. அப்புறம் அந்த அப்பனையே நடுத் தெருவிலே கொண்டாந்து நிறுத்தறதுதான் வித்தியாசமின்றிச் சமவாய்ப்பு அளிக்கிறதாக்கும்?"

"இங்கே நான் ஒரு சமஸ்தானாதிபதியின் மகள், மேட்டுக் குடியைச் சேர்ந்தவள், குடிசைவாசிகளுக்கு நன்மை செய்ய மாட்டேன்னு முன்கூட்டியே பிரச்சாரம் பலமாக நடந்திரிச்சுங்கிறதாலே இந்த ஆவாரம்பட்டு ஹ்வுஸை 'அக்வேர்' பண்ணி அதன் மூலம் நான் 'ஏழை பங்காளி'ன்னு மக்களுக்கு நிரூபிக்கணும்னு எங்க தலைவர் அபிப்பிராயப்படறார்."

"அதை நீ செயல்படுத்தினியாக்கும்?"

"ஆமாம்...செஞ்சு தொலைக்க வேண்டியதாப் போச்சு...வேற வழி?... உங்க மகள்ங்கிற முறையில் நீங்க என்னை மன்னிக்கணும். கவர்மெண்ட் குடுக்கிற காம்பன்சேஷன்லே வேற வீடு கட்டிக்கலாம். அல்லது எங்கூட வந்து இருக்கலாம்." '.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அநுக்கிரகா.pdf/133&oldid=1265116" இலிருந்து மீள்விக்கப்பட்டது