பக்கம்:அநுக்கிரகா.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



முன்னுரை

டாக்டர் சு. வேங்கடராமன்

இணைப் பேராசிரியர் (தமிழ்த்துறை)

மதுரை காமராசர் பல்கலைக்கழகம்

தமிழில் அரசியல் நாவல்கள் மிகவும் குறைவு. அத்தகு அரசியல் நாவல்களிலும் சமகால அரசியல் நாவல்களாக—அரசியலை விமர்சிக்கும் நாவல்களாக அமைவது அருகிய வழக்கமாக உள்ளது. அமரர் நா. பார்த்தசாரதி இந்த அருகிய வழக்கைச் செம்மையாகச் செய்துள்ளார். 'சத்திய வெள்ள'த்தில் தொடங்கிய இப்பணியை அவர் பல நாவல்களில் தொடர்ந்து செய்தார். இப்போது வெளிவரும் அநுக்கிரகா நாவலிலும் சமகால அரசியலை விமர்சித்து நா.பா. எழுதியுள்ளார். ஆக்ஸ்போர்டில் படித்து மேற்கத்திய நாகரிகத்தில் திளைத்து நிற்கும் அநுக்கிரகா நம் ஊர்ப் பேட்டை அரசியலில் திட்டமிட்டுப் புகுத்தப்பட்டு, அடிமட்ட உறுப்பினர், மேடைப் பேச்சாளர், நட்சத்திர மதிப்புப் பேச்சாளர், திருமணத்தில் வாழ்த்துரைப்பவர், எம். எல். ஏ., மந்திரி என்று படிநிலை வளர்ச்சி பெறுவதை நாவல் சித்திரிக்கிறது. மந்திரியாக ஆனபின் அரசியல் எவ்வாறு அவளை உருமாற்றுகிறது என்பதையும் தன்னை அரசியலுள் புகுத்திய தன் தந்தையையே எவ்வாறு எதிர்த்து நிற்கிறாள் என்பதையும் காட்டுவதன் மூவம் அரசியல் எவ்வாறு குடும்ப உறவுகளைச் சிதைக்கிறது என்று காட்டுவது அழுத்தமான அரசியல் விமர்சனமாகும்.

தமிழர்களின்—இந்தியர்களின் அரசியலில் எவ்வாறு பொய்யும் புனை சுருட்டும் கலந்துள்ளன என்பதை இந்த நாவல் நன்கு காட்டுகிறது. தங்கள் பெயரினை மாற்றிக் கொள்வதிலும், 'சீவகசிந்தாமணிச் சிங்கமே சீறி எழு! சிறுத்தையே பொறுத்தது போதும் பொங்கி எழு! புறநானூற்று புலியே புறப்படு! அகநானூற்று யானையே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அநுக்கிரகா.pdf/5&oldid=1267794" இலிருந்து மீள்விக்கப்பட்டது