பக்கம்:அநுக்கிரகா.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

59

ஆனால் அநுக்கிரகாதான் ஏமாற்றிவிட்டாள். புலவர் எழுதிக் கொடுத்த பேச்சை படிக்காமல் தானே ஏதோ சுயமாகப் பேசுகிறேன் என்று கிளம்பி, பொருளாதாரம், இறக்குமதி ஏற்றுமதி திட்டம் என்று விளக்கெண்ணெய் விவகாரங்களைப் பேசி போரடித்து விட்டாள். படுகொலைக்குப்பம் மக்களுக்குப் புரிந்த லோகல் தகராறுகளை விளாசியிருந்தால் பிரமாதமாக அமைந்திருக்கும். புலவரும் கடுமையான வசைமொழி நடையில் லோகல் தகராறுகளைத்தான் எழுதிக் கொடுத்திருந்தார். அவள் தான் அவற்றை விட்டுவிட்டுப் பொருளாதாரத்தில் புகுந்து ஜனங்களை ஏமாற்றியிருந்தாள். ஆனால் பயந்து மிரண்டு கொட்டாவி விட்டுக்கொண்டே மக்கள் அதையும் கேட்டார்கள். 'சதையின் சதையான தமிழ்ப் பெருங்குடி மக்களே!' என வந்த இரண்டு இடங்களிலும் கை தட்டி விசிலடித்து விட்டார்கள். அது மட்டும் தான் அன்று அவள் பேசியதில் அவர்களுக்குப் புரிந்தது.

ஆனால் பொன்னுரங்கம். கூட்டம் முடிந்து வீடு திரும்பியதுமே அநுக்கிரகாவைக் கடுமையாக எச்சரித்தான்.

"இனிமே இதுமாதிரி வேற எங்கேயாவது நம்ம பார்ட்டிமேடைங்களிலே வெளியுறவுக் கொள்கை, பொருளாதாரம், திட்டம், ஏற்றுமதி இறக்குமதி அது இதுன்னு இன்னொரு வாட்டி பேசினீங்களோ உங்களைக் கட்சி மேடையிலே ஏத்தறதையே நிறுத்திப்புடுவேன்."

"உண்மையிலே அதெல்லாம் தானே ஒரு அரசியல் பேச்சாளர் சீரியஸாகச் சிந்தித்துப் பேச வேண்டிய விஷயங்கள்?"

“யாரு வேண்டாம்னாங்க? எலெக்சன்லே ஜெயிச்சிட்டு அப்பாலே போயி எது வோணாப் பேசுங்க. ஜெயிக்கிற வரை ஜனங்க புரிஞ்சுக்கிற மாதிரி எதினாச்சும் பேசுங்களேன்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அநுக்கிரகா.pdf/61&oldid=1257421" இலிருந்து மீள்விக்கப்பட்டது