பக்கம்:அநுக்கிரகா.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66

அநுக்கிரகா

யிருந்தனர். புத்தியுள்ளவன் கண்ணுக்கெட்டிய தூரம் வரை தென்படவே இல்லை. மந்தங்களும், மரமண்டைகளும், துதிபாடிகளும், அடிவருடிகளும், விசிலடிப்பவர்களும், கள்ளச் சாராயம் காய்ச்சுபவர்களும் நிறைந்த ம.மு,க. வில் தனது சுயநலத்திற்காகத் தன்னைத் தந்தை பிடித்துத் தள்ளிவிட்டாரே என்று ஆரம்பத்தில் எரிச்சலாய் இருந்தாலும் புகழ், வாழ்க கோஷம், மாலை மரியாதை, ஆரத்தி சுற்றும் பெண்கள், கைதட்டும் ஜனங்கள் எல்வோருமாகச் சேர்ந்து——எல்லாமாகச் சேர்ந்து அவளுக்கு அதில் ருசி ஏற்படுத்தியிருந்தார்கள். இப்போதெல்லாம் பொதுக் கூட்டம் இல்லாமல், கூட்டத்தைப் பார்க்காமல், கைதட்டலைக் கேட்காமல் அவளால் வீட்டில் முடங்கிக் கிடக்க முடியவில்லை, சாயங்காலம் ஆனால் பொன்னுரங்கம் எங்கே?' என்று கேட்க ஆரம்பித்தாள். அவன் வருவதற்கு நேரமானால் காரை அனுப்பி டிரைவரிடம் அவனைக் கூட்டிக்கொண்டு வருமாறு கூறியனுப்பினாள்.

முத்தையாவே, "நீ எங்கும் போக வேண்டாம் வீட்டோடு இரு, போதும்" என்று கூறினால் கூட இனி மேல் அவள் கேட்க மாட்டாள் போலிருந்தது. பொன்னுரங்கத்தின் மேலும், ம.மு.க. ஆட்கள் மேலும் முத்தையா வுக்குத்தான் வெறுப்பும், சலிப்பும், தட்டினவே ஒழிய, அநுக்கிரகாவுக்குப் பிடிமானமும், பற்றும் அதிகமாகிக் கொண்டிருந்தன.

கனி வண்ணனைத் திட்டுகிறேன் பேர்வழியே என்று சுடுசரம் என்ற பத்திரிகைக்காக மாதம் தவறாமல் முத்தையாவிடம் பயங்கரமாகப் பணத்தைக் கறந்தார்கள் பொன்னுரங்கமும், கடும்பனூர் இடும்பனாரும். அதில் ஒவ்வொரு தரமும் முதல் பக்கத்திலிருந்து பதினாறாம் பக்கம் வரை ஐந்தாறு இடங்களிலாவது அநுக்கிரகாவின் புகைப்படத்தைப் பிரசுரித்தார்கள். அறிவுச்செல்வி அநுக்கிரகா, வருங்கால வழிகாட்டி, எதிர்காலத் தலைவி என்றெல்லாம் எழுதி அவளைப் புல்லரிக்க வைத்தனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அநுக்கிரகா.pdf/68&oldid=1257427" இலிருந்து மீள்விக்கப்பட்டது