பக்கம்:அநுக்கிரகா.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நா. பார்த்தசாரதி

71

முழங்கினான். புகழ்மாலை பாடினான். வியந்துரைத்தான்.

அநுக்கிரகா எம்.எல்.ஏ. ஆவது பற்றி முதன் முதலாக மேடையில் பிரஸ்தாபித்தது இந்த இளஞ்சோழன் தான் அன்று அந்தத் திருமண வாழ்த்துரையில் அதன் பின் பேசிய அனைவரும் மணமக்களை விட்டு விட்டார்கள். அநுக்கிரகா எம்.எல்.ஏ. ஆக வேண்டிய அவசியம் பற்றியே பேசித் தீர்த்தார்கள். சரித்திரம் படைக்கும் நம் தங்கத் தலைவி, சங்கத் தமிழ்ச் செல்வி, சாதனை அரசி தான் நமது அடுத்த சட்டமன்ற உறுப்பினர். கல்யாண வீட்டில் வைத்து இந்த நல்ல செய்தியை, உங்களுக்குச் சொல்வதில் உண்மையிலேயே நான் உவகை மிகக் கொள்கிறேன்,' என்று பொன்னுரங்கமும் முத்தாய்ப்பு வைத்தது போல் பேசினான். நேரம் காலம், சுபம் அசுபத்தில் நம்பிக்கை இல்லை என்று ஒரு சமயம் பேசினார்கள். அடுத்த கணமே, 'கல்யாண வீட்டிலே வைத்து இந்தச் சுப சமாசாரத்தை உங்களுக்குச் சொல்கிறேன். இது பலிக்கும்' என்று சொன்னார்கள். இதெல்லாம் அநுக்கிரகாவுக்குப் புதுமையாகவும், வேடிக்கையாகவும் இருந்தன. மேடையில் இருந்தபடியே இவற்றை ரசித்தாள். அவளை விட வயதானவர்கள் போல் தோன்றிய மணமகளும், மணமகனும் அவள் காலில் விழுந்து கும்பிட்டபோது அவளுக்குக் கூச்சமாய் இருந்தது.

வாழ்த்து மடல் படிக்கிறேன் பேர்வழி என்று ஒரு விடலைப் பையன் மைக்கைப் பிடித்துக்கொண்டு அறு அறு என்று அறுத்தான்.

"வாழ்க்கை என்னும் பாலைவனத்தில் பூத்த பன்னீர்ப் பூக்களே! சந்தர்ப்பவாதம் என்னும் சுறா மீனுக்குப் பலியாகிவிடாமல் உங்கள் வாழ்க்கைத் தோணியை முன்னே செலுத்துங்கள்..."

——என்று மணமக்களைப் பாலைவனத்தில் வறுத்து அலைகடலில் புரட்டி இன்னும் என்னென்னவெல்லாமோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அநுக்கிரகா.pdf/73&oldid=1257570" இலிருந்து மீள்விக்கப்பட்டது