பக்கம்:அநுக்கிரகா.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



11


மறவன் குரலில் அநுக்கிரகாவையும். இளஞ்சோழனையும் பற்றி ஒரு மாதிரிக் கட்டுரை வெளிவந்த உடனே பொன்னுரங்கத்தைக் கூப்பிட்டனுப்பினார் முத்தையா. உடம்பில் கம்பளிப் பூச்சியோ மரவட்டையோ ஊர்ந்து விட்டாற் போன்ற அருவருப்பை உணர்ந்தார் அவர்.


"எதை வேணாப் பொறுத்துப்பேன். ஆனா இந்த மாதிரிக் கேரக்டர் அஸாஸிநேஷனை மட்டும் என்னால தாங்கிக்க முடியாது. பொன்னுரங்கம்." எங்க வம்சத்திலே இந்த மாதிரி ஒரு பொம்பளை அவனோட போனா, இவனோட போனான்னு கிடையாது. இந்த ஃபேமிலி லேடீஸ் நெருப்புன்னா நெருப்பா இருக்கறவங்க."

"சும்மா அந்தப் பேப்பர்காரன் பண்ற வம்பைப் பார்த்து ஆத்திரப்படாதீங்க. எந்தத் தப்புத்தண்டாவும் நடந்துடலே. அந்தப் பையனும் ரொம்ப நல்வமாதிரி, அவனுக்குக் கண்ணாலம் முடிஞ்சி ரெண்டு பசங்கக்கூட இருக்கு. நம்ப பாப்பா கிட்ட ரொம்ப மரியாதை உள்ள பையன். அவன் பண்ணின ஒரே தப்பு மணிவிழாச் சொற்பொழிவிலே, இந்தத் தொகுதியோட சிட்டிங் எம்.எல்.ஏ. கனிவண்ணனைத் தாக்கி, எதிர்காலத்திலே——நம்ம பாப்பா பேரைச் சொல்லி அதுதான் இங்கே சட்டசபைக்கு நிற்கணும்னு ஓப்பனாப் பேசினானே, அது தான். அதிலே வந்த ஆத்திரத்திலே தான் மறவன் குரல் இப்படித் தாறு மாறா எழுதுது. நாம் பதிலுக்கு நம்ம சரத்திலே ஒரு பிடி பிடிச்சோம்னா தானாக் 'கப் சிப்னு' மூடிக்குவானுக."

"சுடு சரத்திலே என்னான்னு எழுதப் போறே பொன்னுரங்கம்?"

"அதான்..அவன் சொல்றதை மறுத்து எழுதணும்."

"சேத்திலே சகதியிலே. கல்லை விட்டெறிஞ்சா நம்ம மூஞ்சியிலியும் தெறிக்கும்னு தெரியுமா?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அநுக்கிரகா.pdf/76&oldid=1257577" இலிருந்து மீள்விக்கப்பட்டது