பக்கம்:அநுக்கிரகா.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

அநுக்கிரகா

அகற்றப்பட்டு அந்த இடம் ஆவாரம்பட்டு அரண்மனையோடு சேர்க்கப்பட்டு விடும் என்றும், ஆவாரம்பட்டு ஜமீன்தார் திவான் பகதூர் சர். வி.டி. முத்தையாவுக்குக் குடிசைகள், குப்பங்கள் என்றாலே பிடிக்காது என்றும் ஆக்ஸ்போர்டிலே படித்த அவர் மகளுக்கும் 'ஸ்லம்களை' ஒழிப்பதுதான் லட்சியம்' என்றும் பிரசாரத்தில் இறங்கியது. தொகுதியில் உள்ள அத்தனை குடிசைப் பகுதிகளிலும் அநுக்கிரகாவுக்கு ஒரு வோட்டுக் கூட விழாமல் பண்ணிவிட வேண்டும் என்று கனிவண்ணன் முயன்றான்.

இருவரும் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்வதற்கு முன்பே பிரசாரத்தில் இறங்கியிருந்தார்கள். ஒருவர் வாய்ப்பை இன்னொருவர் தடுக்க முயல்வது தெரிந்தது. ஒரே கட்சியைச் சேர்ந்த இருவர் இப்படி இரு கோஷ்டிகளாகிச் சேற்றை வாரி ஒருவர் மேல் மற்றவர் இறைப்பதைக் கட்சித் தலைமையும் கண்டு கொள்ளாமல் இருந்தது.

ம.மு. கட்சி டிக்கெட் யாருக்குக் கிடைக்கும் என்பதும் புதிராக இருந்தன. தேர்தல் நெருங்க நெருங்க இது சூடு பிடித்தது. முத்தையா பயந்தார். பொன்னுரங்கம் பர பரப்பின்றி இருந்தான்.

"ஒண்ணும் பயப்படாதீங்க, இந்தவாட்டி கனிவண்ணனுக்கு நம்ம கட்சி டிக்கெட் கிடைக்காது. பாப்பாவுக்குத் தான் கிடைக்கப் போகுது."

"அது சரிப்பா! டிக்கெட் கிடைச்சா மட்டும் போதுமா? வோட்டு வாங்கி ஜெயிச்சுக் காட்டணுமே? அவன் விடாமே என்னைப் பற்றியும் அநுக்கிரகாவைப் பற்றியும் ஏழைங்களோட எதிரி, குடிசைகளைத் தொலைக்கும் பண முதலைகள்னு பிரசாரம் பண்ணிக்கிட்டே இருக்கானே?"

"அந்தக் கதை எல்லாம் எடுபடாது...ஆனா எலெக்ஷன் முடிகிறவரை நீங்க மட்டும் கொஞ்சம் கவனமா நடந்துக்கணுங்க."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அநுக்கிரகா.pdf/78&oldid=1257583" இலிருந்து மீள்விக்கப்பட்டது