பக்கம்:அந்தமான் கைதி.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

111

வருந்திப் பெற்றுப் பாலூட்டிச் சீராட்டி வளர்த்த பச்சிளங் கன்னிகையை உயிரோடு பலியிட்டாயே அம்மா! நீயே யோசித்துப்பார்; நீ கல்யாணம் செய்து கொண்ட காலத்தில் என் தந்தை ஒரு கிழவனாய் இருந்திருந்தால், உன் மனம் என்ன பாடுபட்டிருக்கும்.

அம்மா, அம்மா, அம்மா! பெண்ணாய் பிறந்த உனக்கு ஒரு இளம் பெண்ணின் உணர்ச்சி தெரியாமல் போய்விட்டதே! அம்மா, ஐயோ! நினைத்தாலும் நெஞ்சம் வெடித்துவிடும் போலிருக்கிறதே! உனது தாயுள்ளத்தைப் பணப் பேய்க்கு இரையாக்கி விட்டாயே! அம்மா, ஐயோ! உனது ஹிருதயமென்ன கல்லாகி விட்டதா? தொண்டு கிழவன் உன்னருங் குமரியைத் தொட்டுத் தாலிகட்டிய அந்தக் கோரக் காட்சியைக்கண்டு உன் கண்களிலே இரத்தம் சிந்தவில்லையா? ஐயோ என் உள்ளத்தின் குமுறல், இதயத்தின் எதிரொலி, உன் செவிகளிலே விழவில்லையா? அம்மா...அம்மா...... ஆம், ஆம்! உன் மீது குற்றமில்லை! இந்தச் சண்டாளர்களின் கூட்டத்தில் அபலையான என் தங்கையை விட்டுச் சென்றது என் அறியாமையே! அந்தோ! நானே சண்டாளன்! நானே சண்டாளன்...ஆம். மனமற்ற இத் திருமணத்தை உதறித் தள்ளிவிட்டு நாளையே மறுமணம் செய்வேன் என் தங்கைக்கு நீயல்ல உன் தமையனல்ல, இந்த உலகமே எதிர்த்து நின்றாலும் சரி, கவலையில்லை. மறுமணம் செய்தே தீருவேன். இருளடைந்த என் அருந்தங்கையின் வாழ்க்கையில் ஒளி நிலவட்டும், மனம் பொருந்தா மணம் மண்ணாய்ப் போகட்டும்.

(வெறி கொண்டவன்போல் ஓடுகிறான்.)



"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தமான்_கைதி.pdf/112&oldid=1072437" இலிருந்து மீள்விக்கப்பட்டது