பக்கம்:அந்தமான் கைதி.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

124

பாசாங்கு செய்த ஜம்புவைப் பிடித்துக் கொண்டாய். ஆகா! என்னே உன் வாழ்க்கை. தூ தூ மகாவெட்கம், விபசாரி கூட இவ்வளவு இழிவாய் நடக்கத் துணியாள் சே! என்ன உலகமோ (வருத்தத்துடன் தலையைக் கவிழ்ந்து கொண்டிருக்கிறான். நடராஜன் வருகிறான். பாலு திடுக்கிட்டு) யார்? நீங்களா! வாருங்கள் இப்படி உட்காருங்கள். ஊரிலிருந்து எப்பொழுது வந்தீர்கள்?

நட : (உட்கார்ந்தபடியே) நேற்று வந்தேன்.

பாலு : ஏது இவ்வளவு தூரம் அபூர்வமாக இருக்கிறதே!.

நட : ஏன் வரக்கூடாதா என்ன?

பாலு : இல்லை, இல்லை. இதுவரை வந்ததில்லையே என்று தான் கேட்டேன்.

நட : உன்னிடம் ஒரு முக்கியமான விஷயத்தைக் குறித்துப் பேச வேண்டும்; அதற்காகத்தான் வந்தேன்.

பாலு : யார்-என்னிடத்திலா?

நட : ஆம், என் தங்கை லீலா விஷயமாக!

பாலு : என்ன! உங்கள் தங்கை விஷயமாகவா? என்னிடமா?

நட : ஆமாம், உன்னிடம்தான் பாலு! உனக்கும் லீலாவுக்கும் எவ்வளவு ஆழ்ந்த அன்பு உண்டென்பது எனக்குத் தெரியும்.

பாலு : உண்மைதான்! அது ஒரு காலம். அதற்கு இப்பொழுது என்ன? லீலாவுக்குத்தான் கல்யாணமாகி எத்தனையோ நாட்களாயிற்றே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தமான்_கைதி.pdf/125&oldid=1072787" இலிருந்து மீள்விக்கப்பட்டது