பக்கம்:அந்தமான் கைதி.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

136

வாங்கவும், கிழிந்து போகும் புடவையை வாங்கவும், பெண்களின் அபிப்பிராயத்தைக் கேட்கும் பெற்றோர்கள், வாழ்க்கை முழுவதும் இன்ப துன்பங்களுக்குக் காரணமா யிருக்கும் திருமண விஷயத்தில் தங்கள் மனம்போன போக்கில் தானே நடந்து வருகிறார்கள். பெண்களுக்கு அந்தச் சுதந்திரமாவது இருந்திருந்தால் நம் நாடு எவ்வளவோ முன்னேற்றம் அடைந்திருக்குகுமே... பாலு! போனது போகட்டும். இப்பொழுது ஒன்றும் மோசம் வந்து விடவில்லை. உன்னையே உண்மையாய் நேசித்து வரும் ஒரு பெண்ணை, அல்லும் பகலும் உன்னையே நினைந்து நினைந்து உருகும் ஒரு அபலையை இப்போது நீ காப்பாற்றப் போகிறாயா, இல்லையா?

பாலு : என்ன லீலாவையா? இனிமேலா? அது எப்படி முடியும்?

நட : ஆம், லீலாவைத்தான்! என் தங்கை லீலாவைத் தான் பாலு! நான் மானத்தை விட்டுச் சொல்லுகிறேன்; லீலாவை நானே அழைத்து வந்து உனக்கு. மறுமணம் செய்து வைக்கிறேன்; சம்மதம் தானே?

பாலு : (ஏளனச் சிரிப்புடன்) அது நமக்குச் சரி. ஆனாலும் எங்கள் வீட்டிலுள்ளவர்களும் மற்றவர்களும் சம்மதிக்க வேண்டாமா? மேலும் இன்னொருவனுக்கு வாழ்க்கைத் துணைவியான ஒருத்தியை நான் திரும்பவும் மணப்பதென்றால் உலகம் என்னைப் பழிக்காதா?

நட : அதைத்தான் நான் முன்பே சொல்லி விட்டேனே, பாலு! நம்மைப் போன்றவர்கள் துணிந்தால்தான், இவைகளை யெல்லாம் சீர்திருத்த முடியும்.

பாலு : என்னை மன்னிக்க வேண்டும். நான் இன்னும் அவ்வளவு சிறந்த சீர்திருத்தக்காரன் என்ற நிலைக்கு வரவில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தமான்_கைதி.pdf/127&oldid=1072894" இலிருந்து மீள்விக்கப்பட்டது