பக்கம்:அந்தமான் கைதி.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46


நட : மற்றவன் தன்னைத் தாங்குவான் என்று நினைப்பவன் மனிதனாகவே இருக்க முடியாது.

பொன் : அடே வேண்டாம், வீணாகக் கெட்டுப்போகாதே. உன்னையும் உன் நிலைமையையும் உணராமல் பேசுகிறாய். அதனால் நீ அதிகக் கஷ்டப்படுவாய்; நான் சொல்வதைக்கேள்.

நட : (பொறுமையை இழந்து) நீ சொல்வதை நான் கேட்கத் தயாராயில்லை. நான் சொல்வதை நீ கேள். ஆல்ரைட் திவான் பகதூர், கெட் அவுட்.

பொன் : என்ன திமிர்! ஏழைக் குறும்பு என்பது சரியாய்த்தான் இருக்கிறது...... உம்! மயிலே மயிலே என்றால் இறகு போடுமா? இருக்கட்டும், அடே யாருடா அங்கே?

வேலை ஆள் : எஜமான்!

பொன் : ட்ரைவரைக் கார் எடுக்கச் சொல். (கிளம்புகிறார்).

(வேலையாள் போகிறான்)

காமா : என்னண்ணா-அவனுக்காகவா இப்படிக் கோபித்துக் கொள்வது? அவன் சிறு பையன் தானே. அவன் போறான் எனக்காகவாவது நீங்க சாப்பிட்டுட்டுத் தான் போகணும்.

பொன் : இந்தப் பிச்சைக்காரப்பயல் வீட்டிலா? (பெருமூச்சு விட்டு) இருக்கட்டும் பார்த்துக்கொள்ளுகிறேன். (டிரைவர் வருகிறான்) என்னப்பா கார் எடுக்கல்லையா?

ட்ரைவர் : எஜமான் பெட்ரோல் அடைச்சிக்கிட்டு கார் ஸெல்ப் எடுக்க மாட்டேங்குது. தள்ளி ஸ்டாட் எடுக்கறதுக்கு நாலு ஆள் வேணும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தமான்_கைதி.pdf/47&oldid=1029033" இலிருந்து மீள்விக்கப்பட்டது