பக்கம்:அந்தமான் கைதி.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

97

தெரிந்துகொண்டேன். லீலா நீ என்னை வஞ்சித்தாய். போகட்டும், நீயாவது சுகபோகத்தில் அந்த இளங் காதலனோடு இன்புற்று இரு, இரு, இரு கெட்டுப்போன உலகம்.

(தலையிலடித்துக் கொள்ளுகிறான்)



காட்சி 24.


இடம் : திவான்பகதூர் மாளிகை

காலம் : இரவு

(சாந்திமுகூர்த்த அறை)

பாத்திரங்கள்: திவான்பகதூர், லீலா.

[அழுது கொண்டிருந்த லீலா கண்களைத் துடைத்துக் கொண்டு தலை முடியை அலங்கோலம் செய்து கொண்டு கண்ணாடிக்கு முன் நின்று பைத்தியம் போலச் சிரிக்கிறாள்.]

லீலா : (தனக்குள்) ஆமாம். இதுதான் நல்ல யோசனை! வேஷம் நன்றாகவேயிருக்கிறது. ஆனால் யுக்தி பலிக்க வேண்டும். லீலா! உன் கற்பைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டிய பொறுப்பு உன் கையில்தான் இருக்கிறது. இதுதான் கடைசிக் கண்டம். இதில் நீ தோல்வி அடைந்தாயோ, அவ்வளவுதான்! உன் எதிர்கால மனக்கோட்டை யாவும் இடிந்து தகர்ந்துவிடும், ஜாக்கிரதை (சிறிது மெளனம்) வெட்கக்கேடுதான். என்ன செய்வது? நாய் வேஷம் போட்டால் குரைத்துத்தானே ஆகவேண்டும்? (யாரோ வருகிற சப்தம் கேட்கிறது) அதோ அந்தக் கிழட்டுச் சனியன்தான் வருகிறது போலிருக்கிறது, வரட்டும்.

(ஓடிப்போய்த் தலையணைமேல் முகத்தைவைத்துத் தலைவிரிகோலமாய்க் கிடக்கிறாள்.)
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தமான்_கைதி.pdf/98&oldid=1073454" இலிருந்து மீள்விக்கப்பட்டது