பக்கம்:அந்தித் தாமரை.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44


மோன நிலை பயின்றாள் பாமா. ஓர் ஆண் உருவம் தெரிந்தது. ஆணழகன். நிதி மிக்கவன்; ஆனால், நீதி மறந்தானே? ‘ஐயையோ! நான் என்ன பாவம் செய்தேனோ முன் சென்மத்திலே?...இல்லாட்டி காலவெனை இப்படியெல்லாம் என்னை அலக்கழிக்குமா?... 'அவர்’ என்னை விட்டுப் பிட்டுப் போயிடாமல் இருந்திருந்தா, இப்படிப்பட்ட சோதனை காத்திருக்குமா?... 'அவர்’ என்னையும் தன் மகனையும் அதோகதியா விட்டுப்பிட்டு அண்ணைக்குப் போனாரு; இப்ப, அதே மகனை விட்டுப் பிட்டு நான் இருக்க வேணும்னு 'இவர்' சொல்றாரே? தெய்வத்துக்கு அடுக்குமா? நான் பெத்த ராஜாவை எப்பிடி நான் பிரிஞ்சு இருப்பேன்?...தெய்வமே!’

தோன்றி மறைந்தான் நாடிமுத்து. இன்பதிருப்பத்திற்குப் பிள்ளையார் சுழி அமைத்த அவன், அவல முடிவுக்குப் பாமாவை ஆளாக்கிவிட்டு ஓடிய அவன், ஒடி வந்தவள் ஒருத்தியின் மது மையலிலிருந்து காலத்தை ஓட்டிக் கொண்டிருக்கும் விவரம் இப்போது பாமாவுக்குத் தெரிந்து என்ன ஆகப் போகிறது?ஆறு மாதம் வரை அவள் கைக் குழந்தையுடன் பட்ட அல்லல் அனுபவத்தை எங்ஙனம் மறப்பாள்? தாரமிழந்த வள்ளி நாயகம் பாமாவின் மையலில்மயங்கி, அவள் இஷ்டப்படியெல்லாம் ஆடும் பொம்மையென நற்சாட்சிப் பத்திரம் பெற்றார். முன்புதன்னை உறுத்தாத மணி இப்போது உறுத்தவே, அதனால் வேதனைப்பட்ட அவர் இப்போது புதுச் சட்டம் விதித்தார். இது விதியின் சட்டமல்லவே?

***

பனகல்-பூங்காவினின்றும் இசைத் தட்டு சங்கீதம் புறப்பட்டுப் பரவிய வண்ணம் இருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தித்_தாமரை.pdf/46&oldid=1304997" இலிருந்து மீள்விக்கப்பட்டது