பக்கம்:அந்தித் தாமரை.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

ராஜாத்திப்பெண், அசல் ராஜாத்தியாகவே வளர்க்கப்பட்டாள். வந்தவர் போனவரெல்லாம் பார்வதியை எடுத்துக் கொஞ்சி உச்சி மோந்து விட்டுத்தான், பிறகு பூரணலிங்கத்தைப் பேட்டி காண்பார்கள். வாரத்துக்கு ஒரு முறை தாய்க்காரி திருஷ்டி சுற்றிப் போட்டுவிட்டுத் தான் அசந்து தூங்குவாள். பெற்றவர்களின் அன்பை வளர்த்துவிட்டபடி, ஆசைக் கனவுகளின் பட்டியலை அதிகரிக்கச் செய்தவாறு, பார்வதி காலத்தின் வளர்ச்சிக்குத் தலை சாய்த்து வந்தாள். காலம் பார்வதியைப் பச்சிளங் குழவியினின்று, பாவாடை கட்டிய பாப்பாவாக்கி, பிறகு பக்குவமடைந்த கன்னியாக்கி விட்டது.

அப்படிப்பட்ட வேளையில்தான் விதிக்கு வேளை வந்தது போலும்! சமஸ்தானத்தின் ஜாதகம் மாறிய கையுடன் பூரணலிங்கத்தின் ஜாதகமும் மாறியது. வேலை போயிற்று; கைப்பிடித்த மனைவி மாண்டாள்; அத்துடன் நின்றிருந்தால் போதாதா...? அப்புறம் தான் அவர் வாழ்வில் திரும்புமுனை ஏற்பட்டது; அந்தத் திரும்பு முனைதான் அவர் ஈன்ற ஒரே பெண்ணின் திரும்பு முனையாகவும் அமைந்த தென்றல், அது மொத்தத்தில் விதியின் 'மோடி' என்றுதானே சொல்லவேண்டியுள்ளது! பார்க்கப் பள பள வென்றிருந்த பூரணலிங்கத்திற்கு எங்கிருந்தோ வந்து சேர்ந்தது பெருவியாதி. நாட்களின் வளர்ச்சியுடன் வியாதியும் வளர்ந்தது. சேமித்த பணம் வியாதியின் நிமித்தம் செலவானது தான் மிச்சம்; வியாதியில் யாதொரு குணமும் உண்டாகவில்லை.

இப்படிப்பட்ட நிலையில், பூரணலிங்கம் தன் உறவினர் சிலரைக் கொண்டு, மகளின் கல்யாணத்துக்கு, ஏற்பாடு செய்ய வேண்டியன செய்தார். முன்பின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தித்_தாமரை.pdf/54&oldid=1305849" இலிருந்து மீள்விக்கப்பட்டது