பக்கம்:அந்தித் தாமரை.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

53

கிடைத்த விவரங்களை நன்றாக எடைபோட்டுப் பார்த்து மாப்பிள்ளைப் பையன்களை வரவழைத்துப் பெண்ணைப் பார்க்கச் செய்தார்.

‘பார்வதியின் கழுத்தில் மூன்று முடிச்சுகள் சுப வேளையில் விழுந்து விட்டால், அப்புறம் எனக்குக் கவலையே இல்லை. ‘அக்கடா’ வென்று இந்த உலகத்தை விட்டே விடை பெற்றுக் கொண்டு போய்விடுவேன். பார்வதியின் சுபீட்சம் என்றால், அவளது இறந்த அம்மாவின் ஆவிக்கு எவ்வளவோ நிம்மதியாகயிருக்குமே! மகள் கல்யானத்திற்காவது அவள் அன்னை உயிருடன் பிழைத்திருந்தால் எத்தனையோ நன்றாயிருந்திருக்குமே...!’ என்று அடிக்கொரு முறை தன் மனசைத் திறந்து வெளியிட்டுக் கொண்டிருந்தார்.

பூரணலிங்கத்தின் விருப்பத்தின் பிரகாரம் அவர் மகளைப் பெண் பார்க்க வந்தார்கள் மாப்பிள்ளைப் பையன்கள்; பார்த்தார்கள்; புறப்பட்டுச் சென்றார்கள். போனதும் பதில் போடுவதாகச் சொல்லிவிட்டுப் போனவர்கள் பதில் போடுவதில் நூற்றுக்கு நூறு சதவீதம் நாணயத்தைக் கடைப்பிடித்தார்கள். ஆனால், அந்தப் பதில்தான் பார்வதிக்கும் அவள் தந்தைக்கும் பேரிடியாக அமைந்தது. தந்தைக்குள்ள பெருவியாதி மகளையும் பாதித்திருக்கும் என்று பயப்படுவதாகவும், ஏற்க இயலாதிருப்பதாகவும் மாப்பிள்ளைப் பையன்கள் அப்பட்டமாகப் பதில் போட்டுவிட்டார்கள். எல்லோருடைய பதிலும் ஒருமுகமாக அமைந்தது கண்டு பூரணலிங்கம் கண்மறைவில் வடித்த கண்ணீருக்குக் கணக்கு வழக்கே கிடையாது. தந்தையின் துயரை ஊகித்தறிந்தவள் போல பார்வதி தன் துரதிருஷ்ட நிலையைக்கூட மூட்டை கட்டி ஒதுக்கி வைத்து விட்டு, தகப்பனார் தன் பொருட்டு வருந்தலாகாதே என்று,

அந்தி 4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தித்_தாமரை.pdf/55&oldid=1305854" இலிருந்து மீள்விக்கப்பட்டது