பக்கம்:அந்தித் தாமரை.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

61



அது சமயம்தான் ரஞ்சனி விழிகளை வாதனையுடன் திறக்க முயன்று திறந்து பார்க்கலானாள். அவள் பார்வையில் அவள் கணவன்மட்டுமே நின்று ஆலவட்டமிடுவதாக அவள் உணர்ந்தாள். அதை ஒன்றையே அவள் எதிர்பார்த்தவள் போலவும் அவள் கண்களின் கங்கில் குறிப்பு ஒட்டியிருந்தது. அவள் முறுவல் பூக்க இதழ்களைப் பிரிக்க முயன்றாள். ஒட்டுப் பிசின் இழை பாய்ந்து விலகியது. இதழ்கள் விலகியும், புன்னகை முழுதும் மலரவில்லை.

என்ன நினைத்தாரோ, பக்கத்தில் நின்ற தன் உறவுப் பையனைப் பெயர் சொல்லிக் கூப்பிட்டு, கடிதம் ஒன்றை நடுங்கும் கையுடன் எழுதி அதை அந்தப் பையனிடம் நீட்டினார். "இதை ஓடிப்போய் பெரிய ஆஸ்பத்திரி டாக்டர் ரமேஷ் கையில் கொடு. அவரை டாக்ஸி பிடித்துக் கூட்டி வா. ஓடு..." என்றார் டாக்டர்.

"அத்தான்!”

நான்கு எழுத்துக்களை உறவுச் சொல்லாக்கி அமிர்தம் வார்த்து உச்சரிப்பதற்குள் ரஞ்சனியின் முகம் வியர்த்துக் கொட்டியது.

“ரஞ்சு, அலட்டிக்காதே...கண்ணே... இரவுக்குள் உன் அருகே பாப்பா ஒன்று-தங்கப் பாப்பா-அழகுப் பாப்பா விளையாடும். கண்கலங்காதே. அப்புறம் நான் பொறுக்கமாட்டேன். தாயாகப் போகிறாய், பெருமைப்பட வேண்டியவள். என் டாக்டர் நண்பரையும் அழைத்து வர அனுப்பியிருக்கிறேன். பிரசவத்தில் அவர் ஸ்பெஷலிஸ்ட். எங்கே, தூக்கம் வருகிறதா பார்..." என்று சொல்லிய அவர், மெல்ல அவள் தோளணைத்துப் படுக்க வைத்தார்; அவர் விரல் அவளது கேசத்தைத் தடவிக்கொண்டிருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அந்தித்_தாமரை.pdf/63&oldid=1305187" இலிருந்து மீள்விக்கப்பட்டது