பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரஞ்சித் ஆறுதல் அடைந்தார்; சுயப் பிரக்கினையின் ஆதிக்கத்திற்குத் திரும்பிய அவருக்குக் கூடைநாற்காலியின் இனிய சுகம் இனிமையாகவே புரிகிறது; என்றாலும், உள்மனத்தின் அடிவாரத்திலே சலனமும் சாந்தியும் விளையாடிக்கொண்டுதான் இருக்கின்றன: “ரஞ்..மை டியர்!..”

‘ஒமேகா’ குருவி அந்தம் சேர்த்துச் சந்தமும் சேர்த்துக் கூவுகிறது: கூவிக்கொண்டிருக்கிறது.

மணி எட்டு.

ரஞ்சனி இப்படியும் இருப்பாளா, என்ன?

தலையை நிமிர்த்தினார் ரஞ்சித்; நிமிர்ந்து நின்ற நிலைக் கண்ணாடியில் பளிச்சிட்ட கண்ணீரைத் தரிசித்ததும், ஓர் அரைக்கணம் தியான நிலையில் கண்களை மூடிக்கொண்டார். அரைக்கணம் கழித்து, கண்களைத் திறந்தபொழுது, மனச்சலனம் கட்டுப்பட்டதை, கட்டுப்படுத்தப்பட்டதை அவரால் உணர முடிந்தது; அவசரம் அவசரமாகக் கண்ணீரை வழித்துவிட்டார்!- ரஞ்சனி பார்த்துவிடப் போகிறாள்! அவள் வருவதும் போவதும் தெரியாது!

இரண்டாங் கட்டில் காலடி ஓசை கேட்கிறது.

நிலைக்கண்ணாடி புன்னகை செய்தது.

ஆர்வத் துடிப்புடன், “ரஞ்..” என்று விளித்தார் பாங்கர்,.

ஆனால்---

வந்தவளோ நத்தினி. “டாடி...” என்று குழைந்தாள்: மாக்ஸியில் எடுப்பாகவே தோன்றினாள்; தூக்கத்தின் கலக்கத்தை மூடி மறைத்திட, ‘இமாமி’ பவுடரைக் கொஞ்சம் கூடுதலாகவே அள்ளித் தெளித்துக்கொண்டு வந்திருக்க வேண்டும். “என்னங்க, அப்பா?” என்றாள்.

8