பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ் முதல்வனுக்குப் பூந்தமிழால் மாலை இடுகிறாள் பக்திப்பெண் ஒருத்தி!

மறுகணம்:

கூடத்தில் புண்ணிய பூமியின் கறைபடாத, கரை காணாத, புனிதமான, பொற்புடைய அமைதி ஆனந்தமாகவும் அற்புதமாகவும் ஆட்சி நடத்தியது.

“இன்று புதிதாய்ப் பிறந்தோம் நாம்!” என்கிற பாணியிலே, அவரவர்கள் குதூகலத்துடன் உணவுகொண்டனர்.

குற்றம் நீங்கின அமைதியும், மன்னிப்பில் கிட்டிய ஆறுதலும், சலனம் கலந்த சாந்தியும், சமாதானத்திடைச் சஞ்சரித்த நம்பிக்கையும் அப்போது அவர்களுக்கு மத்தியில் கண்களுக்குப் புலனாகாத கடவுள் மாதிரியும், அதைவிடவும், கண்ணுக்குள் தெரியாத விதிபோலவும் விளையாடின; விளையாட்டுக் காட்டின!

மகேஷ் பக்கம் ரஞ்சித் பார்வையைச் செலுத்தினார்.

ஒரு சிலிர்ப்பு.

மகேஷ் அதோ, தலைநிமிர்ந்து ரஞ்சித்தை மட்டுமல்லாமல், ரஞ்சித்தின் ரஞ்சனியையும் சுத்தமான தைரியத்தோடு பார்க்கிறார்; பார்வையிடுகிறார்.

ஜோடிச் சிரிப்பு.

ரதிக்கென்ன?--- அவள் ராஜாத்தி!---மலையாளப் பூங்குயில்!--- “சில்ப்பக்காரி”யாக்கும்!--- தம்புராட்டியும் அவளே! சொப்பனங்கள் அவளுடைய பட்டுக் கரு நீல விழிகளிலே சொகுசாக ஆனந்தச் சல்லாபம் செய்தன போலும்! பின்னே, அவள் ஆனந்தமாகச் சாப்பிடக் கேட்கவேண்டிய தில்லை.

106