பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மணிப்பயல் பாபு அபூர்வரகம்: இலையைக் காலி பண்ணி விட்டான்; வழக்கத்தைக் காட்டிலும் அதிகமாகவே சாப்பிட்டுவிட்டான் !

“பழனி மலை ஆண்டியே! ‘உனக்கு என்ன வேணும்’?” என்று விசாரணை நடத்தினாள் ரஞ்சனித் தாய்!--- ‘பாபுவை அடுதத வருஷம் ஹாஸ்டலுக்கு அனுப்பவே கூடாது; இங்கேயே தான் வச்சுக்க வேணும்: பாபு இங்கே இல்லாட்டி, எனக்குப் பைத்தியம் பிடிச்சிடும்!’

பாபு: “எனக்கு நீதான் வேணும், அம்மே!” அசல் பழனி ஆண்டியும் அன்னை உமையவளிடம் இப்படித்தான் புராணக்காலத்திலே வசனம் பேசியிருப்பான்!--- “அச்சனும் தான் எனக்கு வேணுமாக்கும்!” நிஜார்ப் பையைச் சாகசமான சாமர்த்தியத்தோடு தடவிப் பார்த்துக் கொள்கிறான் வாண்டுப்பயல்.

ரஞ்சித் வாய்விட்டுச் சிரித்தார். “உன் அப்பாவையும் அம்மாவையுந்தான். நீ பிறந்த அந்த நிமிஷத்திலேயே உனக்கென்று எடுத்துக் கிட்டியேடா, தெய்வமே!” உண்மையான கண்ணீருக்கு இடம் பொருள் எல்லாம் துச்சம், தூசுக்குச் சமம்!

ரஞ்சனி மனம்விட்டுச் சிரிக்கிறாள்:

“ஆமாம்ப்பா! நீ எப்பவுமே எங்க தெய்வமேதான்! உன்னோட அப்பாவுக்கும் அம்மாவுக்கும் நீ எப்பவுமே அருமை பெருமையான பிள்ளையே தாண்டா, பாபு ராஜாவே!” உந்திக் கமலத்தினின்றும் கொப்புளித்த கண்ணீர் கண்களில் நிரம்பி வழிந்தது.

‘ஆ!’--- மகேஷ் திடுதிப்பென்று ஏன் அப்படிக் கதிகலங்குகிறார்? சட்டைப் பையைக் குழப்பத்தோடும் கலவரத்தோடும் தடவித் தடவிப் பார்க்கிறார்: வேர்வை எட்டிப் பார்க்கிறது.

107