பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ரசிப்புத்தன்மையை வெளிப்படுத்த எண்ணிச் சிரிப்பை, உதிர்க்கவும் நினைத்திருந்தாள்.

ஆனால்---

அதற்குள், தந்தையும் தாயும் முந்திக்கொண்டு விட்டார்களே?-அவர்களின் ஜோடிச் சிரிப்பு ஜோடியாக வெடித்து, ஜோடியாகவே சிதறியது.

அவ்வளவுதான்.

நந்தினியின் முகம் தொடாமலே சுருங்கிவிட்டது. காரணம் இல்லாமலா? அப்பா-அம்மாவின் பேச்சில் இழைந்திருந்த அந்நியோன்யத்தை உணர்ந்தறித்து, நான் ரசித்துச் சிரிப்பதற்குள்ளாக, அவர்கள் ஏன் முந்திக் கொண்டார்களாம்?-நல்ல கேள்விதான்!

ரஞ்சித்-ரஞ்சனி தம்பதிக்கு நந்தினியைப் பற்றித் துல்லியமாகத் தெரியும். இருவரும் அர்த்தச் செறிவோடு பார்த்துக்கொண்டனர்; பிறகு, அருமைத் திருமகளைப் பார்த்தனர்; “புறப்படம்மா, நந்தினி, பூஜைக்கு டைம் ஆச்சு.” என்று இருவரும் ஒரே குரலில் பாசத்தோடும் பரிவோடும் சொன்னார்கள்,

போதாதா?

நந்தினிக்குப் பெருமை வந்துவிட்டது, பெருமை! ஐம்பொன் விக்கிரகம், உயிர் பெற்ற மாதிரி நடை பயின்றாள்; மலர்ந்த சிரிப்பு: மலராத குறும்பு; அம்மாவின் இஷ்டப்படி பூஜையில் கலந்து கொள்ளவேண்டும். இம்மாதிரியான சம்பிரதாயங்களில் அம்மாவுக்குக் கண்டிப்பு அதிகம்: ஈடுபாடும் கூடுதல். ஆர்வத் தூண்டுதலுடன் கால்களை எட்டிப்போட்டாள் நந்தினி.

அலைகள் இல்லாமல், கடல் இல்லை.

மனமும் அப்படித்தான்.

11