பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கன்னத்தில் அமைந்திருந்த அந்தக் கறுப்பு நிற மரு இப்போது வினையாகச் சிரித்தது.

மகேஷ், ‘பாபு!...’ என்று மறுபடி விளித்தார்; விளித்தவர், ஏனோ, மறு வினாடி மெளனம் சாதித்தார்: தனது இடது கன்னத்தில் இருந்த பொல்லாத அந்தக் கறுப்பு வடுவை - அசிங்கமாகக் காட்சியளித்த அந்தக் கறுப்பு மருவை நடுங்கும் விரல்களால் தடவினார்; தடவிக் கொண்டிருந்தார்.

பாபுவுக்குச் ‘சுரீர்’ என்னும் வினோதமான ஒர் உணர்வு நெஞ்சம் முழுவதிலும் பரவத் தொடங்கியது. ‘என்ன அதிசயம் இது?-மகேஷ் ஸாரோட இடது கன்னத்திலே இருக்கிற கறுப்பு மரு---வடு மாதிரியே, என்னோட இடது கன்னத்திலேயும் ஒரு கறுப்பு மரு - வடு இருக்குதே? என்ன வேடிக்கை இது?- பிஞ்சு மனம் ஏனோ தவிக்கிறது!எப்படியோ தவிக்கிறது! அவனையும் மீறி, அவனுடைய நிர்மலமான கண்கள் கலங்கவும் தொடங்குகின்றன.

“பாபு, நான் உன் மேலே வச்சிருக்கிற பரிசுத்தமான அன்பையும் துல்லிதமான பாசத்தையும் ஆண்டவன் அறிவான்; ஆனா, நீ அறியமாட்டே!- நான் உன்கிட்டே பிரியம் கொண்டிருக்கிறது மாதிரியே, நீயும் என்கிட்டே பிரியம் கொள்ளவேணும் என்கிறது என் ஆசை; இந்தப் புனிதமான ஆசை அநியாயமாய் நிராசையாக ஆகிடப் படாதேன்னுதான், நான் உன் மனசான மனசை மாற்றி, என் பக்கம் நல்லபடியாகத் திருப்பவும் நினைச்சேன்: அதனாலேதான், நான் உன்னைத் தனிமையிலே கண்டு உன்கிட்டே பேசவும் நினைச்சேன்!... கதை இவ்வளவுதான், பாபு!” உணர்ச்சி வசப்பட்ட நிலையில் வார்த்தைகளைக் கொட்டி அளந்து, டக்கென்று பேச்சை நிறுத்தி விட்டார் மகேஷ். கழுத்துப் புறத்தில் வழிந்த வேர்வை, வழிந்து கொண்டே இருக்கிறது; வேர்வையில் விழிநீரும் கலக்கிறது.

ஆ-9

133