பக்கம்:அந்தி நிலாச் சதுரங்கம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிந்தனையின் வசப்பட்டு நின்றார் ரஞ்சித்.

ரஞ்சனியின் மனத்தில் ஏனோ சலனம் கண்டது. சதா சர்வகாலமும் அத்தானுக்கு என்னதான் மாளாத சிந்தனையோ? பெருமூச்சு கூனிக்குறுகிப் பூநாகமென நெளிந்தது. கைத்தலம் பற்றியவரின் கைகளைப் பற்றுதலோடு தொட்டாள். அவளுக்கும் சிலிரித்தது. “அத்தான், கிளம்புங்க; பூஜைக்குத் தாமதமானால், அம்மன் கோபிச்சுக்கிட மாட்டா: ஆனா, நம்ப பொண்ணு கோவிச்சுக்கும்,” என்று சொன்னதும் சொல்லாததுமாக, நடையைத் தாண்டி, நடை தொடர்ந்து உள் பக்கம் சென்றாள்.

மகேஷ் பேசியதை ஆருயிர் ரஞ்சனியிடம் சொல்லிவிட வேண்டுமென்றுதான் துடித்துக்கொண்டிருந்தார் ரஞ்சித்; முடியாமல் போய்விட்டது: ஒரிடத்திலே, ஒரு நிமிஷம், இரண்டு நிமிஷமென்று நின்றால்தானே? அவளுக்கு அம்மன் கவலை. ஆகவே, உடனடியாகப் பூஜைக்கு ஆஜராகிவிட வேண்டும். ‘ரஞ்சனியும்கூட தொட்டால் கருங்கிதான்!’ பரபரப்படைந்தார் பாங்கர்.

பூஜை மணி முழங்குகிறது.

ஸ்ரீ மாங்காட்டுக் காமாட்சிக்குக் கற்பூர ஆராதனை என்றால், ரொம்பவும் பிடிக்கும் அல்லவா? கொழுந்து விட்டெரிந்த கற்பூரத்தின் ஒளியில் அம்மனின் அருட்பெருஞ் சிரிப்பு ஜோதிமயமாகப் பளிச்சிட்டது.

ரஞ்சனி மெய்ம்மறத்தாள்.

மூடியிருந்த ரஞ்சித்தின் கண்கள் இன்னமும் திறக்கவில்லை; திறந்திருந்த இதயத்தை இன்னமும் அவர் மூடவில்லை. பக்தியின் பரவசத்தில், முத்துக்கள் தோன்றின; உதிர்ந்தன; அன்பின் நெகிழ்ச்சியில் நெஞ்சம் உருகியது: கரைந்தது. கைகளின் அஞ்சலி முத்திரை தொடர்ந்தது: தொடர் சேர்த்தது.

12